ADDED : செப் 02, 2011 11:59 PM
பழநி : வருவாய் துறை அலட்சியத்தால் தத்தளித்த பொந்துபுளி மலைவாழ் மக்களுக்கு, 'தாட்கோ' மூலம் வீடு கட்டி கொடுக்க, வனக்குழு திட்டமிட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து மீட்கப்பட்ட 17 மலைவாழ் குடும்பங்கள், தற்போது பொந்துபுளியில் வசிக்கின்றனர். இவர்களுக்காக, வனத்துறை மூலம் தனியார் நிலம், விலைக்கு வாங்கப்பட்டது. இதில் 'தாட்கோ' மூலம் வீடு கட்ட, கடந்த ஆண்டில் ஏற்பாடுகள் நடந்தன. நிலத்திற்கு பயனாளிகள் பெயரில் பட்டா இல்லாததால் பிரச்னை உருவானது. அப்போதைய ரேஞ்சர், வனக்குழு தலைவர் பெயரில் நிலம் இருந்தது. இதை உட்பிரிவு செய்வதிலும், வருவாய்துறை அலட்சியம் காட்டியது. வீடு கட்ட தலா 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்ட போதும், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது குடிசைகளில் தங்கியுள்ள மக்கள், மழை நேரங்களில் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டும் பணிகள் துவக்கப்பட உள்ளன. ரேஞ்சர் தர்மராஜ் கூறுகையில், ''பொந்துபுளி பகுதியில் 50 சென்ட் தனியார் பட்டா நிலம், கிராம வனக்குழு வசம் உள்ளது. தாட்கோ நிதியுதவியுடன் பழங்குடியினர் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் ரூபாயில், வீடுகள் கட்டிக்கொடுக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. வனக்குழு மூலம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், பட்டா குறித்த பிரச்னை இல்லை,'' என்றார்.மழைக்காலம் துவங்கும் முன், மலைவாழ் மக்களுக்கான வீடுகள் கட்டும் பணியை துரிதப்படுத்த, கலெக்டர் நாகராஜன் முயற்சி எடுக்க வேண்டும்.


