குண்டு பல்புக்கு "குட்பை' சொல்லுங்க!
குண்டு பல்புக்கு "குட்பை' சொல்லுங்க!
குண்டு பல்புக்கு "குட்பை' சொல்லுங்க!
ADDED : ஜூலை 19, 2011 10:09 AM

கோவை: 'குண்டு பல்புக்கு பதில் சி.எப்.எல்., பல்பு பயன்படுத்தினால், மின்சாரத்தை சேமிக்கலாம்' என, மின்வாரிய கோவை மண்டல தலைமை பொறியாளர் தங்கவேல் கூறினார்.
மேட்டுப்பாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றும் முகாம் நடந்தது. இதில், மண்டல தலைமை பொறியாளர் தங்கவேல் பேசியதாவது: கோவை மண்டலத்திலுள்ள 19 கோட்டங்களில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யும் சிறப்பு முகாம் மூன்றாவது ஆண்டாக நடக்கிறது. முதல் ஆண்டில் 8,500 பேரும், இரண்டாமாண்டில் 6,532 பேரும் பயனடைந்துள்ளனர். நடப்பாண்டு ஆறு கோட்டங்களில் முகாம் நடந்துள்ளது. இதில் 1,550 பேர் பெயர் மாற்றம் செய்துள்ளனர். நாட்டில் பருவமழை சரியாக பெய்யாததால், நீர் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய, அனல் மின் நிலையம் மூலம் மின்< உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலிருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்ஸைடு சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. மரங்களை வளர்ப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கலாம். இதற்காக மின்வாரியம் மரக்கன்றுகளை வழங்குகிறது. மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகின்றன. குண்டு பல்புக்குப் பதிலாக, சி.எப். எல்., பல்பு பயன்படுத்தினால், மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
கோவை மண்டலத்தில் பழுதடைந்த 900 மின் கம்பங்களை மாற்ற, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல, மின் டிரான்ஸ்பார்மர்களுக்கு பெயின்ட் அடித்து புதுப்பொலிவு செய்யப்படும், என்றார்.
செயற்பொறியாளர் முகமது முபாரக் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் பக்தவச்சலம், வெங்கடேசன், பத்மாதேவி, சத்யா, சரஸ்வதி உள்ளிட்டோர் மனுக்களை பெற்றனர்.
முகாமில் 500க்கும் மேற்பட்டவர்கள் பெயர் மாற்றம் கோரி மனுக்கள் கொடுத்தனர்; 300 பேருக்கு உடனடி பெயர் மாற்றம் செய்து, பத்திரங்கள் வழங்கப்பட்டன.


