Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/புதியவர்களை வரவேற்க மாநகராட்சி மன்றம் தயார்

புதியவர்களை வரவேற்க மாநகராட்சி மன்றம் தயார்

புதியவர்களை வரவேற்க மாநகராட்சி மன்றம் தயார்

புதியவர்களை வரவேற்க மாநகராட்சி மன்றம் தயார்

ADDED : செப் 26, 2011 08:59 PM


Google News

சென்னை : சென்னை மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டு, கிரேட்டர் சென்னைக்கு தேர்தல் நடப்பதால், கூடுதல் கவுன்சிலர்களுக்கு ஏற்ப, மாநகராட்சி மன்றம் சீரமைக்கப்படுகிறது.

இதற்கான பணிகளை மாநகராட்சி துவங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் தற்போது, 155 கவுன்சிலர்கள் உள்ளனர். இதற்கேற்ப மன்றத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது, விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியில், 200 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்கள் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கு ஏற்ப, கூட்ட அரங்கை மாற்றி அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. மன்றத்தில் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த பகுதி, கவுன்சிலர்களின் இருக்கைகளாக மாற்றப்படுவதால், மன்றக் கூடத்துக்கு அருகில் இருக்கும் அறைக்கு அதிகாரிகள் அமரும் இடம் மாற்றப்படுகிறது.



மேலும், கூட்ட நடவடிக்கைகளை வீடியோ மூலம் அதிகாரிகள் பார்க்கும் வகையில், 'டிவி'கள் அந்த அறையில் பொருத்தப்படுகின்றன. இதுதவிர, எம்.எல். ஏ.,க்கள், எம்.பி.,க்கள் அமருவதற்கு என, 25 இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. மாநகராட்சி தேர்தல் முடிந்து, புதிய மேயர் மற்றும் கவுன்சிலர்களின் பதவியேற்பு, அக்., 25ம் தேதி நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் நடக்கிறது. அதற்கு முன், சீரமைப்புப் பணிகளை முடித்து, மன்றக் கூடத்தை தயார் செய்யும் வகையில் பணிகள் வேகம் பிடித்துள்ளன. ஏற்கனவே நடந்து வரும் ரிப்பன் பில்டிங் புனரமைப்புப் பணியோடு, இப்பணிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ரிப்பன் பில்டிங் புனரமைப்பு பணிக்கு, ஜவகர்லால் நேரு தேசிய நகரப்புற மேம்பாட்டுத் திட்டத்தில், 7.2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.



20 வார்டு 200 வார்டு ஆனது: 200 கவுன்சிலர்களைக் கொண்டதாக உருப்பெற்றுள்ள சென்னை மாநகராட்சிக்கு, 400 ஆண்டு கால வரலாறு உள்ளது. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 1905ல் 20 கவுன்சிலர்களை கொண்டிருந்தது. 1930ல் 30 ஆக உயர்ந்தது. இவர்களோடு, நகரிலுள்ள நிறுவனங்களின் பிரதிநிதியாக, 11 பேரும், அரசால் நியமித்த, 9 பேரும் மன்ற உறுப்பினர்களாக இருந்தனர். 1937ல், இவர்களின் எண்ணிக்கை, 40 ஆகவும், கவுன்சிலர்களின் எண்ணிக்கை 60ஆகவும் உயர்த்தப்பட்டது. சென்னை மாநகராட்சி சட்டம் 1947 பிரிவு 6 திருத்தப்பட்டு, நகரம் 50 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டன. கவுன்சிலர்களின் எண்ணிக்கை, 85 ஆக உயர்த்தப்பட்டது. 1958ல் 50 வார்டுகள் 100 ஆனது. இதன்பின், 1978ல் 150 வார்டுகளாக உயர்ந்து, 1991ல் 155 வார்டுகளானது. தற்போது, 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு, 200 வார்டுகள் கொண்ட கிரேட்டர் சென்னையாக உருவாகியுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us