மோடி உண்ணாவிரதத்தில் பங்கேற்கிறார் அத்வானி : நாடகமென காங்கிரஸ் ஆவேசம்
மோடி உண்ணாவிரதத்தில் பங்கேற்கிறார் அத்வானி : நாடகமென காங்கிரஸ் ஆவேசம்
மோடி உண்ணாவிரதத்தில் பங்கேற்கிறார் அத்வானி : நாடகமென காங்கிரஸ் ஆவேசம்
ADDED : செப் 16, 2011 12:13 AM

புதுடில்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி துவங்கவுள்ள உண்ணாவிரதத்தில், பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, அருண் ஜெட்லி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். குஜராத், குல்பர்க் சொசைட்டி கலவர வழக்கு தொடர்பாக, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில்,'இந்த வழக்கை இனியும் சுப்ரீம் கோர்ட் கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பாக, ஆமதாபாத் மாஜிஸ்திரேட் முடிவு எடுப்பார்' என கூறப்பட்டது. இதனால், குஜராத் கலவர வழக்கில், தனக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளதாக, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி கருதுகிறார். இதைத் தொடர்ந்து, குஜராத்தில், சமூக நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றைப் பலப்படுத்தும் வகையில், வரும் 17ம் தேதி முதல், மூன்று நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, மோடி அறிவித்துள் ளார். இந்த உண்ணாவிரதத்தில், பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, அருண் ஜெட்லி ஆகியோர் பங்கேற்க உள்ளதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உண்ணாவிரதத்தில் பங்கேற்பதற்காக, அத்வானியும், நரேந்திர மோடியும், வரும் 17ம் தேதி காலை, ஆமதாபாத் வரவுள்ளனர். அத்வானி, ஆமதாபாத் தொகுதி எம்.பி., என்பதாலும், அருண் ஜெட்லி, குஜராத் மாநிலத்தில் இருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவர் என்பதாலும், இருவரும் மோடியின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன. பா.ஜ., பொதுச் செயலர்கள் ரவி சங்கர் பிரசாத், விஜய் கோயல், செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் மற்றும் அனந்த குமார் உள்ளிட்டோரும், நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்தில் பங்கேற்கவுள்ளனர்.
காங்கிரஸ் ஆவேசம்: நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் குறித்து, குஜராத் மாநில காங்., மூத்த தலைவர் சங்கர் சிங் வகேலா கூறுகையில்,'மோடியின் இந்த உண்ணாவிரதம், ஒரு அரசியல் நாடகம். சுப்ரீம் கோர்ட் உத்தரவை, தனக்குச் சாதகமாக திரித்துக் கூறுகிறார். தன்னை, சிறுபான்மையினரின் பாதுகாவலனாகக் காட்டிக் கொள்வதற்கு முயற்சிக்கிறார்' என்றார்.
பிரதமர் வேட்பாளரா? - வெங்கையா நாயுடு பதில் : வரும் 2014ல் நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலின் போது, பிரதமர் பதவிக்கு ராகுல் மற்றும் நரேந்திர மோடி இடையே போட்டி இருக்கும் என, அமெரிக்க ஆய்வு மையம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. முதல்வர் நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்றாலும், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் பற்றி, 2014ம் ஆண்டு தான் முடிவு செய்யப்படும். அதுவரை காத்திருக்க வேண்டும். அப்போது, நல்லதொரு பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். மோடியை வேட்பாளராக்குவது குறித்து, முதலில் கட்சியில் விவாதித்து, அதன் பின்னரே, முடிவெடுக்க வேண்டும்.


