ADDED : செப் 16, 2011 01:32 AM
அவிநாசி:தேவராயன்பாளையத்தில் இருந்து அவிநாசிக்கு செல்லும் சாலை
துண்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.அவிநாசி புதிய பஸ்
ஸ்டாண்டில் இருந்து ஒன்றரை கி.மீ., தூரத்தில் தேவராயன்பாளையம் உள்ளது.
தற்போது அவிநாசிக்கு தெற்குப்புறத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி
தீவிரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக, தேவராயன்பாளையம் - அவிநாசி சாலை
துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஐந்து கி.மீ., சுற்றிச்
செல்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், பனியன் நிறுவனங்களுக்கு செல்லும்
தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் கவுன்சிலர் அபுசாலி
கூறியதாவது:தேவராயன்பாளையத்தில் இருந்து அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டிற்கு
பின்புறம் வரை 1.5 கி.மீட்டருக்கு திருமுருகன்பூண்டி பேரூராட்சி சார்பில்
ஐந்தாண்டுக்கு முன், ரூ.12 லட்சத்தில் தார் சாலை அமைக்கப்பட்டது.
புறவழிச்சாலை அமைப்பதால் அந்த ரோடு துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால், மங்கலம்
ரோடு வழியாக அவிநாசிக்கு சென்றால் ஐந்து கி.மீ., தூரம் பயணிக்க
வேண்டியுள்ளது. இதை தவிர்க்கும் வகையில், ஏற்கனவே உள்ள சாலையை
போக்குவரத்துக்கு திறக்க வேண்டும், என்றார்.


