Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/போக்குவரத்து போலீசை கண்காணிக்க உளவாளி முறைகேடு தடுக்க கமிஷனர் நடவடிக்கை

போக்குவரத்து போலீசை கண்காணிக்க உளவாளி முறைகேடு தடுக்க கமிஷனர் நடவடிக்கை

போக்குவரத்து போலீசை கண்காணிக்க உளவாளி முறைகேடு தடுக்க கமிஷனர் நடவடிக்கை

போக்குவரத்து போலீசை கண்காணிக்க உளவாளி முறைகேடு தடுக்க கமிஷனர் நடவடிக்கை

ADDED : செப் 14, 2011 01:35 AM


Google News
கோவை:கோவை மாநகர போலீஸ் போக்குவரத்து பிரிவில் பண முறைகேடுகளை தடுக்க, உளவாளிகள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கையை துவக்கியிருக்கிறது, கமிஷனர் அலுவலகம்.கோவை நகரில் நிகழும் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 300க்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர்; ஆயிரக்கணக்கானோர் காயமடைகின்றனர். இதனால், விபத்து தடுக்க, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட வாகன தணிக்கையின் மூலமாக வாகன ஓட்டிகளிடம் இருந்து மூன்று கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டிலும் அபராதம் விதிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து போலீசார் மற்றும் அதிகாரிகளில் சிலர் பண முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. விதி மீறும் வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கும் தொகைக்குரிய ரசீது வழங்காமலும், வசூலிக்கும் தொகையை முழுமையாக ரசீதில் எழுதாமல் குறைத்து எழுதியும், மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில், இது குறித்து திடீர் ஆய்வு நடத்திய போலீஸ் கமிஷனர் அலுவலகம், சரவணம்பட்டி பகுதிக்குரிய போக்குவரத்து எஸ்.ஐ., சுரேஷ் பண முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதை கண்டுபிடித்தது.போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரியின் உத்தரவைத் தொடர்ந்து, எஸ்.ஐ., சுரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து, மற்ற போக்குவரத்து போலீசார் மீதும் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து, போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி கூறியதாவது:விபத்துகளை தடுப்பதற்காக வாகன தணிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் நேர்மையாக பணியாற்ற கடமைப்பட்டவர்கள். முறைகேட்டில் ஈடுபட்டால் பணியில் இருந்தே விரட்டப்படுவர். போக்குவரத்து போலீசார் மீது அவ்வப்போது புகார் எழுவதால், போலீஸ் சாராத நபர்கள் முக்கிய சாலைகளில் உளவாளிகளாக வாகனத்தில் அனுப்பி வைக்கப்படுவர். தணிக்கையின்போது அவர்கள் பிடிபட்டால், போலீசார் நேர்மையாக செயல்பட்டு அபராதம் விதிக்கின்றனரா அல்லது ரசீது வழங்காமலோ, ரசீதில் திருத்தம் செய்தோ பணமுறைகேட்டில் ஈடுபடுகின்றனரா, என கண்காணிக்கப்படுவர். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போலீசார் முறைகேட்டில் ஈடுபடுவது உறுதி படுத்தப்பட்டால் தயவு தாட்சண்யமின்றி துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கை பாயும். சில நாட்களுக்கு முன், பணமுறைகேடு தொடர்பான புகாரில் சிக்கிய போலீஸ் ஏட்டு ஒருவர் பணியில் இருந்து நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டார். அதுபோன்ற ஒழுங்கு நடவடிக்கை இன்னும் வேகப்படுத்தப்படும்.இவ்வாறு, அமரேஷ் புஜாரி தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us