/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வனபத்ரகாளியம்மன் ஆடிக்குண்டம் விழா :பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்வனபத்ரகாளியம்மன் ஆடிக்குண்டம் விழா :பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்
வனபத்ரகாளியம்மன் ஆடிக்குண்டம் விழா :பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்
வனபத்ரகாளியம்மன் ஆடிக்குண்டம் விழா :பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்
வனபத்ரகாளியம்மன் ஆடிக்குண்டம் விழா :பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்
ADDED : ஜூலை 26, 2011 09:25 PM
மேட்டுப்பாளையம் : வனபத்ரகாளியம்மன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடனை செலுத்தி அம்மன் சுவாமியை வழிபட்டனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழாவை முன்னிட்டு 25ம் தேதி இரவு குண்டம் திறக்கப்பட்டது. 36 அடி நீளம், மூன்று அடி அகலமுள்ள குழியில் 9 டன் விறகுகளை அடுக்கினர். மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் நாடார் இளைஞர் நற்பணிக் குழுவைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் குண்டம் அமைத்தனர். நேற்று அதிகாலை 4.00 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பு துவங்கியது. பொதுப்பணித்துறை அம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். காலை 6.30 மணிக்கு பிங்க் கலர் பட்டு உடுத்திய அம்மன் சுவாமியை, ஊர்வலமாக குண்டம் எதிரே கொண்டு வந்தனர். தலைமை பூசாரி குமரேசன் சிறப்புப் பூஜை செய்து, பூப்பந்தையும், எலுமிச்சம் பழத்தையும் குண்டத்தில் உருட்டி விட்டு, 6.45 மணிக்கு முதலில் இறங்கினார். பின்னர் உதவி பூசாரிகள் ஜோதிமணி, ஆனந்தன் மற்றும் சக்தி கரகம் வைத்திருந்தவர்கள் இறங்கினர். சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். எம்.எல்.ஏ., சின்னராஜ், முக்கிய வி.ஐ.பி.,க்கள், நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், பள்ளி மாணவ, மாணவியர், சிறுவர், சிறுமியர் குண்டம் இறங்கினர். காலையில் தொடங்கி பகல் 11 மணி வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.கோவை மேற்கு எம்.எல்.ஏ., சேலஞ்சர் துரை, இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார், மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் சத்தியவதி, தாசில்தார் மோகன ராஜன் உட்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை மாவிளக்கும், மாலை அலகு குத்தி தேர் இழுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 28ம் தேதி இரவு குதிரை வாகனத்தில் பரிவேட்டை அம்மன் திருவீதி உலாவும், வாண வேடிக்கையும் நடக்கிறது. 29ம் தேதி மஞ்சள் நீராட்டும், 30ம் தேதி ஆடி அமாவாசையும், 1ம் தேதி 108 திருவிளக்கு பூஜையும், 2ம் தேதி மறுபூஜையும் நடக்கின்றன.பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., சக்திவேல் தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் உட்பட 350க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீ அணைப்பு நிலையத்தினர் சாரதா டெர்ரி தனியார் கம்பெனி நிர்வாகத்தினர் உட்பட 10க்கும் மேற்பட்ட தனியார் அமைப்பினர், கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கோவை, திருப்பூர், சத்தியமங்கலம் ஆகிய ஊர்களில் இருந்து,கோவிலுக்கு சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் குமரேசன், பரம்பரை அறங்காவலர் வசந்தா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.