Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலூர் - விருத்தாசலம் போக்குவரத்து பாதிக்கும் அபாயம் : நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?

கடலூர் - விருத்தாசலம் போக்குவரத்து பாதிக்கும் அபாயம் : நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?

கடலூர் - விருத்தாசலம் போக்குவரத்து பாதிக்கும் அபாயம் : நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?

கடலூர் - விருத்தாசலம் போக்குவரத்து பாதிக்கும் அபாயம் : நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?

ADDED : ஜூலை 27, 2011 11:07 PM


Google News

கடலூர் : பச்சையாங்குப்பம் ரயில்வே மேம்பால கட்டுமான பணி காரணமாக எதிர் வரும் மழைக் காலத்தில் கடலூர் - விருத்தாசலம் சாலை போக்குவரத்து தடைபடும் அபாயம் உள்ளதால், மழைக்காலம் துவங்கும் முன் தரமான மாற்றுச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலூர் - விருத்தாசலம் சாலையில் பச்சையாங்குப்பத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

இதனால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.கடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி, விருத்தாசலம், திருச்சி செல்லும் 'ரூட்' பஸ்கள் சிதம்பரம் சாலையில் சென்று ஆலப்பாக்கம் வழியாகவும், கிராமப்புறங்களுக்குச் செல்லும் டவுன் பஸ்கள் காரைக்காடு வழியாகவும் திருப்பி விடப்பட்டுள்ளன.



கடலூரில் இருந்து ஆலப்பாக்கம், குள்ளஞ்சாவடி வழியாக கூடுதலாக ஆறு கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளதால் ரூட் பஸ் உள்ளிட்ட அனைத்து பஸ்களுமே காரைக்காடு, அன்னவல்லி வழியாக சென்று வருகின்றன.காரைக்காடு சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக உள்ள நிலையில் அனைத்து பஸ்கள் மற்றும் செம்மண் குவாரியில் மண் ஏற்றி வரும் லாரிகள் உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்களும் காரைக்காடு வழியாக சென்று வருவதால், சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்து பாதித்தது.இதனையடுத்து போக்குவரத்தை சரி செய்ய கடலூர் - சிதம்பரம் சாலையில் காரைக்காட்டில் போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர்.போலீசார் இருக்கும் வரை ரூட் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் ஆலப்பாக்கம் வழியாகவும், டவுன் பஸ்கள் காரைக்காடு வழியாகவும் ஒழுங்காக சென்று வந்தன.



நாளடைவில் அங்கு போலீசார் பணியில் ஈடுபடவில்லை.இதனால் அனைத்து வாகனங்களும் காரைக்காடு வழியாக சென்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பதால், வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.விரைவில் பருவ மழை துவங்க உள்ள நிலையில், ஏற்கனவே போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக உள்ள காரைக்காடு சாலை, சேறும் சகதியுமாகி மிகவும் மோசமான நிலையில் பாதிப்படையும். இதனால் வாகனங்கள் சேற்றில் சிக்கி போக்குவரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது.அதேப்போன்று ஆண்டுதோறும் மழைக் காலங்களில் ஆலப்பாக்கம் - குள்ளஞ்சாவடி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை துண்டிக்கும் நிலை ஏற்படும்.இதனால் போக்குவரத்து தடைபட வாய்ப்புள்ளது.



மேலும் மழைக்காலத்திற்கு முன்பே பச்சையாங்குப்பம் ரயில்வே மேம்பாலம் பணிகள் முழு அளவில் முடிவடைய வாய்ப்பில்லை.இதனால் மழைக்காலங்களில் ஆலப்பாக்கம் - குள்ளஞ்சாவடி சாலை மற்றும் காரைக்காடு - அன்னவல்லி உள்ளிட்ட இரு சாலைகளிலும் போக்குவரத்து முற்றிலும் தடைபடும் அபாயம் உள்ளது.மழைக்காலம் துவங்கும் முன்பே கடலூர் - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து தடைபடுவதை தடுக்க, ஆலப்பாக்கம் - குள்ளஞ்சாவடி சாலை அல்லது காரைக்காடு -அன்னவல்லி சாலையில் தரமான மாற்றுச் சாலையை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில் மழைக்காலங்களில் கடலூர் - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படுவதுடன், 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் அபாயம் உள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us