Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலம் "எலும்புக்கூடு' அடையாளம் தெரிந்தது கற்றக்காதலில் கொல்லப்பட்ட கணவன்

குற்றாலம் "எலும்புக்கூடு' அடையாளம் தெரிந்தது கற்றக்காதலில் கொல்லப்பட்ட கணவன்

குற்றாலம் "எலும்புக்கூடு' அடையாளம் தெரிந்தது கற்றக்காதலில் கொல்லப்பட்ட கணவன்

குற்றாலம் "எலும்புக்கூடு' அடையாளம் தெரிந்தது கற்றக்காதலில் கொல்லப்பட்ட கணவன்

ADDED : அக் 07, 2011 02:17 AM


Google News

தென்காசி : கள்ளக்காதலை கண்டித்த கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பழையகுற்றாலம் அருகே காட்டு பகுதியில் புதருக்குள் எலும்புக்கூடு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி மத்தளம்பாறை வி.ஏ.ஓ., சுப்பிரமணியன் கடந்த 2ம் தேதி குற்றாலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குபதிவு செய்தார். எலும்பு கூடு பிரேத பரிசோதனைக்காக பாளை.,ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்தவர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்ற விபரம் தெரியாமல் இருந்தது. எஸ்.பி.விஜயேந்திரபிதரி உத்தரவின் பேரில் தென்காசி டி.எஸ்.பி. பாண்டியராஜன் மேற்பார்வையில் குற்றாலம் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தீவிர விசாரணை நடத்தினார்.



இந்நிலையில் ஆயிரப்பேரி வி.ஏ.ஓ.,பிரபு சீனிவாசனிடம் மத்தளம்பாறை தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்த வீராசாமி (39) சரணடைந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அதில் உள்ள விபரம் வருமாறு: மத்தளம்பாறையை சேர்ந்தவர் மாரியம்மாள் (26). இவருக்கும் கடையம் மந்தியூர் தெற்கு தெருவை சேர்ந்த சுந்தர் (53) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு கலைச்செல்வி (5) என்ற மகளும், கவுதம் (3) என்ற மகனும் உள்ளனர். வீராசாமியின் அத்தை மகள்தான் மாரியம்மாள். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மத்தளம்பாறைக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் வீராசாமிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.



சில மாதங்கள் கழித்து மாரியம்மாள் மந்தியூருக்கு சென்று தனது கணவருடன் சேர்ந்து வாழும் போதும் இந்த கள்ள தொடர்பு நீடித்துள்ளது. இதனை சுந்தர் கண்டித்துள்ளார். ஆனால் மாரியம்மாள் கேட்கவில்லை. இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு அதிகரிக்கவே மாரியம்மாள் மீண்டும் தனது குழந்தைகளுடன் மத்தளம்பாறைக்கு வந்து விட்டார். அப்போது இருவரும் 20 ரூபாய் பத்திரத்தில் விவாகரத்து குறித்து எழுதி கையெழுத்து போட்டுள்ளனர்.



மத்தளம்பாறையில் மாரிம்மாளுக்கு புறம்போக்கு இடத்தில் தனியாக வீடு ஒன்றை வீராசாமி கட்டி கொடுத்துள்ளார். அங்கு இருவரின் கள்ளத் தொடர்பும் எவ்வித இடையூறும் இன்றி நீடித்துள்ளது. அப்போது சுந்தர் தனது உடைகளை கொண்டு வந்து தரும்படி மாரியம்மாளுக்கு தகவல் அனுப்பியுள்ளார். இதனையடுத்து சுந்தரின் உடைகளை வீராசாமியிடம் மாரியம்மாள் கொடுத்து அனுப்பியுள்ளார். வீராசாமி உடைகளை சுந்தரிடம் கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் நைசாக பேசிய சுந்தர் திடீரென பிளேடால் வீராசாமியின் கழுத்தை அறுத்துள்ளார். இதுபற்றி வீராசாமி கடையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கொலை முயற்சி வழக்குபதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்.



இவ்வழக்கில் இருந்து சுந்தர் ஜாமினில் வெளியே வந்தார். அவர் கோர்ட் நிபந்தனை படி தினமும் காலையில் கடையம் போலீசில் கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டவர் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது அண்ணன் கடையம் போலீசில் புகார் செய்தார். காணவில்லை என்று போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.



கொலை முயற்சி வழக்கில் இருந்து தப்பித்து விட வேண்டும் என எண்ணிய சுந்தர் போன் மூலம் வீராசாமியிடமும், மாரியம்மாளிடமும் பேசியுள்ளார். சமாதானமாக போய் விடுவோம் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி சுந்தர் வற்புறுத்தியுள்ளார். இதற்கு வீரசாமியும், மாரியம்மாளும் சம்மதம் தெரிவித்து ஜூலை மாதம் 27ம் தேதி மத்தளம்பாறைக்கு வரும்படி கூறியுள்ளனர். இதனால் யாரிடமும் கூறாமல் சுந்தர் மத்தளம்பாறைக்கு வந்துள்ளார்.



ஏற்கனவே சுந்தரை கொலை செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வீரசாமியும், மாரியம்மாளும் அவரை மத்தளம்பாறைக்கு வரவழைத்தனர். தங்களின் திட்டத்தின் படி சுந்தர் மத்தளம்பாறைக்கு வந்ததும் அவருக்கு மது வாங்கி கொடுத்து பழையகுற்றாலம் காட்டுப் பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது வீராசாமி, மாரியம்மாளுக்கு துணையாக ஆய்க்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மாரியப்பன் (23), தென்காசி மங்கம்மா சாலையை சேர்ந்த விஜயன் மற்றும் கேரளாவை சேர்ந்த ஒருவர் சென்றுள்ளனர்.



பழையகுற்றாலம் அருகே காட்டுப் பகுதியில் அவர்கள் நடந்து சென்றனர். அப்போது திடீரென வீராசாமி சுந்தரை கீழே தள்ளி அவரது கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். அப்போது சுந்தர் தப்பிவிடாமல் அவரை மற்றவர்கள் பிடித்துக் கொண்டனர். தலை அறுபட்டு தொங்கிய நிலையில் அதே இடத்தில் சுந்தர் பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து வீராசாமி, மாரியம்மாள், மாரியப்பன், விஜயன், மற்றும் விஜயனின் நண்பர் உட்பட 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்நிலையில் சுந்தரின் எலும்பு கூடு போலீசாரால் கைப்பற்றப்பட்டதால் எப்படியும் தங்களை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று நினைத்து வீராசாமி வி.ஏ.ஓ.,முன் சரணடைந்துள்ளார்.



வீராசாமி குற்றாலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அவரை கைது செய்தார். மேலும் அவரின் தகவலின் பேரில் மாரியம்மாள், மாரியப்பனை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக விஜயன், கேரளாவை சேர்ந்த நபர் உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us