ADDED : செப் 17, 2011 11:09 PM

ஸ்ரீவில்லிபுத்தூர்: சிறு குழுக்களாக வலம் வரும் மிளா'க்களை, பெண் மிளாவே வழி நடத்தி செல்கிறது.
மிளாவானது மான் வகையை சார்ந்த விலங்கு. இது பெரும்பாலும் இரவில்தான் இரை தேடும். 200 முதல் 300 கிலோ எடை, 3.5 அடி முதல் 4.5 அடி உயரம் வளரும் இவைகளில், ஆண் மிளாவிற்கு கொம்புகள் உண்டு. 25 முதல் 40 அங்குல உயரமுள்ள ஆண் மிளாவின் கொம்புகள், ஆண்டு தோறும் விழுந்து முளைக்கின்றன. கொம்புகள் தடிமனாக தோல் போன்று இருக்கும். இதில் ரத்தம் ஓட்டம் அதிகம் இருப்பதால், கொம்பில் காயம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கின்றன. சாம்பல் நிறத்தில் காணப்படும் மிளாக்கள், தனித்தனியாகவோ, சிறு குழுக்களாகவோ காணப்படும். சிறிய குழுக்களுக்கு பெண் மிளாதான் தலைமை ஏற்கும். பட்டை, புல், பூண்டு போன்றவைகளை உண்ணும் இவைகள், தரை மட்டமான அடர்த்தியான காடுகளில் அதிகம் காணப்படும். மலையின் மேல் உயரத்திற்கு செல்வதில்லை. மிளாவின் கொம்புகள் விழுந்து முளைப்பதை வைத்தே, இனப் பெருக்க காலத்தை அறியலாம். இனப்பெருக்க நேரத்தில் ஆண் மிளா, பெண் மிளாவை தனது எல்கைக்குள் வைத்து கண்காணித்து கொள்ளும். அப்போது வேறு ஆண் மிளாக்கள் வந்தால், சண்டையிட்டு விரட்டியடிக்கும். இதன் கர்ப்பகாலம் 9 மாதங்கள். பிறந்து இரண்டு ஆண்டுகள் வரை தாயுடன் இருக்கும் குட்டிகள், அதன் பின் தனியாக சென்று விடும். தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், பொள்ளாச்சி, தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் அதிகளவில் காணப்படுகின்றன.