Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி : மாற்று வழிச்சாலை செயல்படுத்தப்படுமா

போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி : மாற்று வழிச்சாலை செயல்படுத்தப்படுமா

போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி : மாற்று வழிச்சாலை செயல்படுத்தப்படுமா

போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி : மாற்று வழிச்சாலை செயல்படுத்தப்படுமா

ADDED : ஆக 03, 2011 01:42 AM


Google News

பண்ருட்டி : பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்றுவழி திட்டத்தை துரிதப்படுத்தாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை, திருவெண்ணெய்நல்லூர் மார்க்கம் செல்லும் பஸ்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வ.உ.சி.தெரு, டைவர்ஷன் ரோடு (கடலூர்- சித்தூர்)வழியாக சென்று வந்தன.

அங்கு விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அப் பகுதியினர் மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ராஜாஜி சாலையில் வாகனங்கள் விடப்பட்டன.

இந்த சாலையிலும் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனையடுத்து நகராட்சி சாலையான காந்தி ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ராஜாஜி சாலை, காந்திரோடு ஒருவழிச் சாலையாக மாற்றப்பட்டது. ஆனால் இதில் காந்தி சாலை காய்கறி, மளிகை, பழ வியாபாரிகள் உள்ளடக்கிய முக்கிய தெருவாக உள்ளது. மேலும் இந்த சாலை பல இடங்களில் குறுகலாகவும், வளைவுகளாகவும் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் நகராட்சி சார்பில் காந்தி சாலை உள்ளிட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும் எதிரில் வரும் வாகனத்திற்கு வழிவிட முடியாத அளவிற்கு பல இடங்களில் வளைவு, குறுகல் பாதை உள்ளதால் போலீசார் நினைத்தபடி போக்குவரத்து சீராகவில்லை. படைவீட்டம்மன் கோவில் தேர்முனையில் இருந்து நான்கு முனை சந்திப்பு வரை செல்ல 20 நிமிடம் ஆவதால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு தீர்வாக அரசு மருத்துவமனை பின்புறம், ஐயனார் கோவில் பாட்டை தெரு வழியாக டைவர்ஷன் ( கடலூர் - சித்தூர் சாலை) இணைக்கும் சாலை திட்ட பணிகளுக்கான மதிப்பீடு 63.50 லட்சம் ரூபாய் தயார் செய்யப்பட்டு நகராட்சி ஆணைய ஒப்புதலுக்காக சென்றுள்ளது. துறை பணிகள் முடிவடைந்து நிதி ஒதுக்கீடு பெறுவதற்கும், டெண்டர் உள்ளிட்ட சாலை பணிகள் முடிவடைய 6 மாதங்களுக்கு மேல் ஆகும். அப்படியே திட்ட பணிகள் முடிவடைந்தாலும் ஐயனார் கோவில் பாட்டையில் பல இடங்களில் வளைவு, குறுகலான பாதைகள் உள்ளது. வ.உ.சி.தெருவில் ஏற்பட்ட நெரிசல் போல இங்கும் ஏற்பட்டால் மீண்டும் மாற்று வழிப்பாதை திட்டம் செயலிழக்கும் நிலை உள்ளது. இதற்கு தற்காலிக தீர்வாக மீண்டும் வ.உ.சி.தெரு வழியாக வாகனங்களை திருப்பி விட்டால் ராஜாஜி சாலை, நான்குமுனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறையும். நிரந்த தீர்வாக டேனிஷ் மெஷின் பள்ளி நிர்வாகம் நகராட்சிக்கு தானமாக வழங்கிய 100அடி சாலையில் இருந்து கொக்குப்பாளையம், காளியம்மன்கோவில் பின்புறம் வழியாக அங்குசெட்டிப்பாளையம் சென்றடையும் சிறப்பு சாலை திட்டம் செயல்படுத்தலாம். அரசு மருத்துவமனை டேனிஷ் பள்ளி பின்புறம் துவங்கி கெடிலம் ஆற்றங்கரையோரம் வெள்ளத்தடுப்பு அணையோரம் 100 அடி சாலையாக அங்குசெட்டிப்பாளையம் பாலிடெக்னிக் முன்பு மணப்பாக்கம் செல்லும் சாலை வரை (கடலூர் - சித்தூர் சாலை, கடலூர் - சங்கராபுரம் சாலையை இணைத்தால்) மட்டுமே பைப்பாஸ் சாலைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால்தான் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபடமுடியும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us