ADDED : அக் 08, 2011 12:14 AM
அன்னூர் : அ.மேட்டுப்பாளையத்தில் பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்த சாலையை ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியாமல் சிலர், ஒரே நாளில் சரி செய்தனர்.அன்னூரிலிருந்து சத்தி செல்லும் ரோட்டில், பட்டறையிலிருந்து, அ.மேட்டுப்பாயைம் வழியாக அல்லப்பாளையம் செல்லும் ரோடு பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இந்த ரோட்டை செப்பனிடும்படி அ.மேட்டுப்பாளையம் மக்கள் பல ஆண்டுகளாக ஊராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஜெயஸ்ரீ, ராஜ சுலோசனா ஆகிய இருவர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை, கட்டட இடிபாடுகள் மற்றும் மண் அடங்கிய லோடு ஏற்றிய டிராக்டருடன் ஆறு தொழிலாளர்கள் வந்தனர். அந்த பாதையில் 500 மீட்டர் தூரத்தில் இருந்த குழிகளில் முழுவதும் மண்ணை நிரப்பி, சமன்படுத்தி விட்டு, புறப்பட்டு சென்றனர். இந்த பணியை செய்தது யார் என்று தெரியாத மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.ஊராட்சி துணை தலைவர் பாப்பண்ணன் கூறுகையில்,''குழிகளில் கட்டட இடிபாடுகள் அடங்கிய மண்ணை போட்டு சிலர் நிரப்பியுள்ளனர். ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் தேர்தலுக்காக சிலர் இந்த வேலையை செய்துள்ளனர். டிராக்டர் எண்ணை குறிப்பிட்டு, வட்டார தேர்தல் அலுவலர் பூபதியிடம் புகார் தெரிவித்துள்ளோம். சம்மந்தப்பட்ட இடத்தில், ஊராட்சி செயலர் தங்கவேல் பார்த்து, ஒன்றிய அதிகாரிக்கு அறிக்கை கொடுத்துள்ளார். தேர்தலுக்காக இதுபோன்ற பணியை செய்பவர்கள் ஊராட்சி அல்லது ஒன்றிய அதிகாரிகளிடம் முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும்,''
என்றார்.


