ADDED : ஆக 22, 2011 02:34 AM
திருச்சி: திருச்சி மத்தியச் சிறையில், காலையில் போலீஸ் மற்றும் சிறைத்துறை
அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் எதுவும் சிக்காத நிலையில், அன்று
மதியமே கைதிகளிடம் மொபைல் ஃபோன்கள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மத்தியச் சிறையில் எட்டு பிளாக்குகள் உள்ளது. இதில் விசாரணைக்
கைதிகள் மற்றும் தண்டனைக் கைதிகள் 2,000க்கும் மேற்பட்டோர்
அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் மொபைல் ஃபோன்கள், கஞ்சா, மது, பீடி, சிகரெட்
தடைச் செய்யப்பட்ட போதிலும், தடையின்றி தாராளமாக புழங்கி வருகிறது.
சிறை காவலர்களின் 'ஆதரவோடு' நடக்கும் இதைத்தடுக்க தொடர்ந்து முயற்சிகள்
மேற்கொள்ளப்படுகிறது. பல நேரங்களில் நடக்கும் சோதனைகள் கண்துடைப்பாக
முடிந்துவிடுகிறது. எனவே, மோசமான நிலையில் சிறைச்சாலை நிலவரம் உள்ளது.
இந்நிலையில், நிலஅபகரிப்பு புகார்களில் சிக்கிய தி.மு.க., பிரமுகர்கள்
காஜாமலை விஜய், குடமுருட்டி ஆறுமுகம், 'அட்டாக்' பாண்டி, அனிதா
ராதாகிருஷ்ணன் போன்ற வி.ஐ.பி.,க்களின் வருகையால் திருச்சி மத்திய சிறை
விழாக்கோலம் பூண்டுள்ளது.
கடந்த இரண்டு மாதமாக அதிரடி சோதனைகள் நடத்தப்படாத நிலையில், நேற்று
முன்தினம் திருச்சி மண்டல டி.ஐ.ஜி., அமல்ராஜ் தலைமையில், சிறைத்துறை
டி.ஐ.ஜி., துரைசாமி, எஸ்.பி., லலிதாலட்சுமி, டி.சி., ஜெயபாண்டியன்,
மாநகராட்சி கமிஷனர் வீரராகவராவ் மற்றும் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனை குறித்து முன்கூட்டியே 'லீக்' ஆனநிலையில், சோதனை நடத்திய போலீஸாரின்
கையில் தடைச் செய்யப்பட்ட ஒரு பொருளும் சிக்கவில்லை. 'சிறையில் தடைச்
செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை' என்ற ரீதியில் தகவல்கள்
அனுப்பப்பட்டன.
சோதனை நடந்த அன்று மதியமே, ஏழாவது பிளாக்கில் உள்ள, காட்டூரை சேர்ந்த ஜூலி
(எ) ஆரோக்கியராஜ், வீராசாமி ஆகிய கைதிகள் மொபைல் ஃபோனில் பேசிக்
கொண்டிருந்தனர்.
இதைக்கண்ட வார்டன்கள் அவர்களை பிடிக்கச் சென்றபோது, சிம் கார்டையும்,
பேட்டரியையும் கழற்றி, டாய்லெட்டுக்குள் போட்டுவிட்டனர். அவர்களிடம்
இருந்து இரண்டு மொபைல் ஃபோன்களை மட்டும் கைப்பற்றினர்.