Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/10 நாட்களுக்குள் ஓட்டுப்பெட்டிகளை சீரமைத்து வைக்கவேண்டும் : உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் "ஜரூர்'

10 நாட்களுக்குள் ஓட்டுப்பெட்டிகளை சீரமைத்து வைக்கவேண்டும் : உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் "ஜரூர்'

10 நாட்களுக்குள் ஓட்டுப்பெட்டிகளை சீரமைத்து வைக்கவேண்டும் : உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் "ஜரூர்'

10 நாட்களுக்குள் ஓட்டுப்பெட்டிகளை சீரமைத்து வைக்கவேண்டும் : உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் "ஜரூர்'

ADDED : ஆக 19, 2011 01:32 AM


Google News
Latest Tamil News

சென்னை : உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள ஓட்டுப்பெட்டிகளை, 10 நாட்களுக்குள் சீரமைத்து தயார் நிலையில் வைக்க வேண்டும் என, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



தமிழகத்தில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய, 10 மாநகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள், 98 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து, 618 ஊராட்சிகள் உள்ளன.

இவற்றில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் உட்பட மொத்தம், 1 லட்சத்து, 30 ஆயிரத்து, 962 பதவிகள் உள்ளன. கடந்த 2006ல் தேர்வு செய்யப்பட்ட இந்த உள்ளாட்சி நிர்வாகிகள் பதவிக்காலம், வரும் அக்டோபரில் முடிகிறது. இதனால் அக்டோபர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.



வரும் செப்டம்பர் மாதம் 15ம்தேதி, அரசின் இலவச திட்டங்களான ஆடு, மாடு வழங்குதல், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குதல் ஆகிய திட்டங்கள் துவங்கப்படவுள்ளன. அதன்பிறகு உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அக்டோபர் இரண்டாவது வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான பணிகளில், மாநில தேர்தல் கமிஷன் நிர்வாகம், தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் கமிஷன் அதிகாரிகள் அவ்வப்போது மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான கலெக்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொருபுறம், வார்டுகள் பிரிக்கும் பணிகள் உள்ளாட்சி துறைகள் மூலம் நடந்து முடிந்துள்ளது. ஆனால், இது குறித்த, அதிகாரப்பூர்வ பட்டியல் இன்னும் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்படவில்லை.



சட்டசபையில் தற்போது பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. உள்ளாட்சித் துறை தொடர்பான விவாதங்களுக்கு பிறகே, அரசு எடுக்கும் முடிவின்படி, புதிய எல்லை விரிவாக்கங்களின்படி சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் வாய்ப்புள்ளது. அதனால்தான், புதிய வார்டுகளின் பட்டியல் இன்னும் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்படவில்லை எனத் தெரிகிறது. இது ஒருபுறம் இருக்க உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை நகரப்பகுதிகளில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலமும், கிராமப்புற பகுதிகளில் ஓட்டுப்பெட்டி மூலமும் ஓட்டுப்பதிவு நடக்க இருக்கிறது. இதற்காக, 40 ஆயிரம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில், அந்தந்த மாவட்டங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுப் பெட்டிகளும், ஓட்டுப் பதிவிற்காக பயன்படுத்தப்படவுள்ளன.



எண்ணெய் போட்டு மொழுகி... : ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, ஓட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளதால், பல பெட்டிகள் மோசமடைந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகள் உத்தரவின்படி, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். துருபிடித்து, திறக்க முடியாமல் கிடந்த ஓட்டுபெட்டிகளை எண்ணெய் போட்டு பராமரிப்பதற்காக, ஒரு பெட்டிக்கு ஐந்து ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டது. எண்ணெய் போட்டு துடைத்து பராமரித்தபின்பு, 90 சதவீத பெட்டிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. மீதமுள்ள, 10 சதவீத பெட்டிகளை, சுத்தம் செய்து பெயின்ட் அடித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளே, இதற்கான நியாயமான தொகையை நிர்ணயம் செய்து பணிகளை மேற்கொள்ளலாம் என, தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கியுள்ளது.



எஸ்.அசோக்குமார்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us