Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சிறை விதிகளை மீறி மொபைலில் பேசிய மாஜி அமைச்சரின் தண்டனைக் காலம் 4 நாட்கள் நீட்டிப்பு

சிறை விதிகளை மீறி மொபைலில் பேசிய மாஜி அமைச்சரின் தண்டனைக் காலம் 4 நாட்கள் நீட்டிப்பு

சிறை விதிகளை மீறி மொபைலில் பேசிய மாஜி அமைச்சரின் தண்டனைக் காலம் 4 நாட்கள் நீட்டிப்பு

சிறை விதிகளை மீறி மொபைலில் பேசிய மாஜி அமைச்சரின் தண்டனைக் காலம் 4 நாட்கள் நீட்டிப்பு

ADDED : அக் 07, 2011 10:47 PM


Google News
Latest Tamil News
திருவனந்தபுரம்: கேரளாவில் சிறை வாசம் அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் ஆர்.பாலகிருஷ்ண பிள்ளை, சிறை விதிகளை மீறி, மொபைலில் பேசியது கண்டறியப்பட்டதால், அவரின் நன்னடத்தை காலத்தில் நான்கு நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் நான்கு நாட்கள் சிறையில் இருக்க நேரிடும்.

கேரள மாநில முன்னாள் மின்துறை அமைச்சர் ஆர்.பாலகிருஷ்ண பிள்ளை. கேரள காங்கிரஸ் (பி) கட்சியைச் சேர்ந்த இவர், பதவியில் இருந்த போது, இடுக்கி மாவட்டம் எடமலையார் பகுதியில் நிறைவேற்றப்பட்ட மின் திட்டத்தில் முறைகேடுகள் செய்ததாக ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் தொடர்ந்த வழக்கில், பாலகிருஷ்ண பிள்ளைக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, திருவனந்தபுரம் பூஜப்புரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில், பாலகிருஷ்ண பிள்ளை கட்சியின் சார்பில், அவரது மகன் கணேஷ்குமார் வனத்துறை அமைச்சராக உள்ளார். பாலகிருஷ்ண பிள்ளையின் சிறைவாசம், அடுத்தாண்டு பிப்ரவரி 18ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரோலில் வந்த அவர் மூன்று வாரங்களுக்கு முன், தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா அருகே வாளகம் பகுதியில் உள்ள பாலகிருஷ்ண பிள்ளைக்கு சொந்தமான பள்ளியில், பணியாற்றும் ஆசிரியர் மீது நடந்த தாக்குதல் குறித்து, அவர் தனியார் 'டிவி' சேனல் நிருபர் மற்றும் முதல்வரின் செயலருடன் மொபைல்போனில் பேசினார் என, குற்றச்சாட்டு கிளம்பியது. இந்த விவகாரம் மாநில சட்டசபையிலும் எழுப்பப்பட்டு, சபை அமளி, துமளியானது. இருப்பினும், பாலகிருஷ்ண பிள்ளை சிறை விதிகளை மீறினாரா என்பது குறித்து சிறைத்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர் சிறை விதிகளை மீறியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு சிறையில் வழங்க இருந்த நன்னடத்தை சலுகைகள் ரத்தாகும் நிலையும், அவர் மேலும் நான்கு நாட்கள் சிறையில் இருக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

கேரள மாநில சிறைத்துறை அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், ''பாலகிருஷ்ண பிள்ளை, சிறை விதிகளை மீறி மொபைல்போனில் பேசினார் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்' என்றார். மேலும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் தலைமையில் ஒரு குழு நேற்று முன்தினம் மாலை மாநில கவர்னர் எம்.ஓ.எச். பாரூக்கை சந்தித்து பேசியது. அப்போது அவர்கள் 'சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலகிருஷ்ண பிள்ளைக்கு, விதிகளுக்கு முரணாக தரப்படும் விசேஷ சலுகைகள் குறித்து நீதி விசாரணை நடத்தப்படவேண்டும்' என, கோரினர்.

சிறை விதிகளின்படி, கைதி ஒருவர் அதிகாரிகளின் முன் அனுமதி பெறாமல், போனில் வெளியே உள்ளவர்களை அழைத்துபேசுவதும் தண்டனைக்குரியது. இதற்காக ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us