Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/சாலை மைய தடுப்பு மூன்று வடிவத்தில் அமைக்க நெடுஞ்சாலைத்துறை தீவிரம்

சாலை மைய தடுப்பு மூன்று வடிவத்தில் அமைக்க நெடுஞ்சாலைத்துறை தீவிரம்

சாலை மைய தடுப்பு மூன்று வடிவத்தில் அமைக்க நெடுஞ்சாலைத்துறை தீவிரம்

சாலை மைய தடுப்பு மூன்று வடிவத்தில் அமைக்க நெடுஞ்சாலைத்துறை தீவிரம்

ADDED : ஜூலை 27, 2011 02:24 AM


Google News
தூத்துக்குடி : தூத்துக்குடியில் விபத்தை தடுக்கும் வகையில் ரோடுகளில் பாதுகாப்பினை அதிகரிக்கும் பொருட்டு மூன்றாம் கேட் ரயில்வே மேம்பாலம் இறங்கும் இடத்தில் சாலை மைய தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இம் மாவட்டத்தில் விபத்தினை குறைக்கும் வகையில் என்ன வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அதிகாரிகள் தரப்பில் பல்வேறு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விபத்தில்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக தற்போது சில துறை அதிகாரிகள் இணைந்து கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள முடிவு செய்தனர்.

கலெக்டர், எஸ்.பி ஆலோசனையின் பேரில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தங்கவேல், வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம் மற்றும் சில துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக சர்வே செய்தனர்.விபத்தினை குறைக்க சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது, அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் ரோட்டை அகலப்படுத்துதல், நான்கு, மூன்று சந்திப்பு ரோடு பகுதியில் தடுப்புகள் அமைத்தல், முக்கிய இடங்களில் வேகத்தடைகள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.இதன் ஒரு கட்டமாக ஏற்கனவே தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த பணிகள் நிறைவு பெற்ற நிலையில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தங்கவேல் நேரடி மேற்பார்வையில் தூத்துக்குடி உதவி கோட்ட பொறியாளர் சத்தியமூர்த்தி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் முக்கிய சந்திப்பு இடங்களில் சாலை மைய தடுப்புகள் அமையும் பணிகள் நடக்கிறது.தூத்துக்குடி 3ம் கேட் ரயில்வே மேம்பாலம் இறக்கத்தில் எட்டயபுரம் ரோடு, அமெரிக்கன் ஆஸ்பத்திரி ரோடு, நான்காம் கேட்டிற்கு செல்லும் ரோடு ஆகியவை சந்திக்கும் இடத்தில் சாலை மைய தடுப்பு அமைக்கப்படுகிறது.சுமார் பத்து லட்ச ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் தடுப்பு பணிக்காக கடந்த சில நாட்களாக ரோட்டில் கற்கள் அடையாளம் வைத்து மார்க் வைக்கப்பட்டது. நான்கு வழிச்சாலையில் மேற்கொள்ளப்படுவது போன்றே இந்த ரோட்டிலும் சாலை மைய தடுப்பு அமைக்கப்படுகிறது.முக்கோணம், செவ்வகம், சதுரம் ஆகிய வடிவுகளில் இதற்கான தடுப்பு மையம் மூன்று இடங்களில் அமையும் வகையில் தற்போது தடுப்பு மைய பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இன்னும் சில நாட்களில் இந்த பணிகள் முடிந்துவிடும். இந்த பணிகள் முடிந்தால் இந்த பகுதியில் விபத்துக்கள் நடப்பது குறைந்துவிடும். இதுபோன்று மாவட்டம் முழுவதும் டிராபிக் நெருக்கடி உள்ள திருப்பங்களில் சாலை மைய தடுப்பு மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us