சபரிமலை கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு
சபரிமலை கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு
சபரிமலை கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு
ADDED : ஆக 18, 2011 07:48 PM
சபரிமலை: சபரிமலையில் அதிகரிக்கப்பட்ட பூஜை கட்டணங்களை, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு திடீரென நிறுத்தி வைத்துள்ளது.
பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக, இந்த முடிவை எடுத்துள்ளது. கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோவிலின் பூஜை கட்டணங்கள் எல்லாம், சமீபத்தில் பல மடங்கு உயர்த்தப்பட்டன. இந்த உயர்வால், அதிருப்திக்கு உள்ளான பக்தர்கள் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என, வலியுறுத்தினர். 'புதியக் கட்டணம் அமலுக்கு வந்தால், செல்வந்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய முடியும்' என்றும் விமர்சித்தனர். இதையடுத்து, கட்டண உயர்வை நிறுத்தி வைப்பதாக, தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது. புதிய கட்டண உயர்வு குறித்து தேவஸ்வம் போர்டு, முறைப்படி கேரள ஐகோர்ட்டுக்கு தெரிவிக்க உள்ளது. ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்த பின்னரே, புதிய கட்டணம் அமலுக்கு வருமா அல்லது தற்போதைய கட்டணமே தொடருமா என்பது தெரிய வரும். சபரிமலையில் பூஜைகள் மற்றும் சுவாமி தரிசனத்திற்கான கட்டணங்களை உயர்த்த வேண்டும் எனில், ஐகோர்ட்டின் அனுமதியை, தேவஸ்வம் போர்டு பெறவேண்டும். கடந்த 2009ல் இதுதொடர்பாக, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஐகோர்ட்டின் அனுமதி பெறாமலேயே புதிய கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகி, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


