
இந்துக்களே...
எல்லாமே குட்டிச்சுவர்!நா.மு.நாச்சியப்பன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: '2ஜி' ஊழல் விவகாரத்தை முதலில் தொடங்கி வைத்தவராக தயாநிதி இருந்திருக்கிறார். மக்கள் பணம் இழப்புக்கு காரணமான ராஜா, கனிமொழி மற்றும் பலரை பிடித்த சி.பி.ஐ., ஊழலுக்கு தொடக்க விழா நடத்திய தயாநிதியை இதுநாள் வரை விட்டு வைத்தது ஏன்?கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரரான மாஜி மந்திரி அருண் ÷ஷாரியை சி.பி.ஐ., விசாரித்தது. 'தேவைப்படும் போதெல்லாம், சி.பி.ஐ., விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன்' என்றார் அருண் ÷ஷாரி. அவர் மனிதரா? இல்லை, மன்மோகன் சிங், சோனியா, கபில் சிபல், ராஜா, கனிமொழி, தயாநிதி மனிதர்களா?குடும்பத் தலைவன் சரியில்லை எனில், குடும்பம் குட்டிச்சுவராகிவிடும். அதுபோல், கட்சித் தலைவனும், ஆட்சித் தலைவனும் சரியில்லை எனில், கட்சியும், நாடும் குட்டிச்சுவராகி விடும். இதுதான் இங்கு நடக்கிறது.நீண்ட கால பயனுக்கு... : ரா.பாலாஜி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: '2011 - 12ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, 23 ஆயிரத்து, 535 கோடி ரூபாய்' என, மத்திய திட்டக் கமிஷன் இறுதி செய்துள்ளது. இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதாவும், திருப்தி தெரிவித்திருப்பது, மத்திய - மாநில அரசுகளிடையே, சுமுக புரிந்துணர்வு உருவாகி வருவது, தமிழக நலனுக்கு நல்லது. கேட்ட நிதியை விட, 535 கோடி ரூபாய் அதிகம் ஒதுக்கி, தன் நட்பான அணுகுமுறையை, மத்திய அரசு காட்டியுள்ளது.தமிழகத்தில், சென்ற ஆட்சி விட்டுச் சென்ற தொடர் கடன் சுமை, ஒரு லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. இது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் இழப்பை விட, 50 சதவீதமே குறைவு. இதில், மின்வாரிய இழப்பு மட்டுமே, 45 ஆயிரம் கோடி ரூபாய் என்பது, ஆற்காடு வீராசாமியின் நிர்வாகச் சீர்கேட்டை உணர்த்துகிறது.இதுபற்றி, தன் முந்தைய டில்லி பயணத்தின் போது, பிரதமரைச் சந்தித்து, இதை மானியமாக அளித்து, தமிழகத்தை கடன் சுமையிலிருந்து மீட்டு, புனர்வாழ்வு அளிக்க ஜெயலலிதா மனு அளித்துள்ளார். இப்போது, திட்ட கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவிடமும் கூறி, அவரின் ஒத்துழைப்பையும் நாடியிருக்கிறார். இதுகுறித்து, பிரதமருடன் நேரில் விவாதித்து, தமிழகம் கூடுதல் உதவி பெற, திட்ட கமிஷன் ஒத்துழைக்க வேண்டும்.அதுபோல், தமிழக அரசும், இந்த கூடுதல் நிதியை இலவசங்களுக்கு வீணாக்காமல், மக்கள் நலத்திட்டப் பணிகளில், குறிப்பாக கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை வசதிக்கு பயன்படுத்தினால், நீண்ட கால பயன் விளையும்.
தெய்வம் தந்த தீர்ப்பு! எம்.வரலட்சுமி, முகப்பேர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே; சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார், சமயம் பார்த்து பல வழிகளிலும் கொள்ளை அடிக்கிறார்' - இது ஒரு பழைய சினிமா பாடலாக இருந்தாலும், இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது தான் சிறப்பு.தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம் போல், ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தோர் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம், ஊடகங்கள் மூலமாகத் தானே, பாமர மக்கள் தெரிந்துகொள்ள முடிகிறது.தவறு நடக்கும்போது, அதை மக்கள் அறியும்படி செய்வது தானே நியாயம். தங்கள் ஊடகத்தின் பெயரிலும், எத்தனை ஊழல்கள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் மறந்துவிட்டு, 'ஊடகங்களின் ஆட்சி நடக்கிறது. அவர்கள் நினைத்தால், யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம்' எனச் சொல்வது, கண்ணாடி வீட்டிற்குள் இருந்து, கல்லெறிவது போல் உள்ளது.'நமக்கும் மேலே ஒருவனடா, அவன் நாலும் தெரிந்த தலைவனடா, தினம் நாடகமாடும் கலைஞனடா' என்ற பாடல் வரிகளைப் போல, தெய்வம் தந்த தீர்ப்பு இது.


