/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நகராட்சி தலைவருக்கு 7 பேர் மோதலால் பரபரப்பு : பலப்பரீட்சையில் இருப்பது 3 பேர் தான்நகராட்சி தலைவருக்கு 7 பேர் மோதலால் பரபரப்பு : பலப்பரீட்சையில் இருப்பது 3 பேர் தான்
நகராட்சி தலைவருக்கு 7 பேர் மோதலால் பரபரப்பு : பலப்பரீட்சையில் இருப்பது 3 பேர் தான்
நகராட்சி தலைவருக்கு 7 பேர் மோதலால் பரபரப்பு : பலப்பரீட்சையில் இருப்பது 3 பேர் தான்
நகராட்சி தலைவருக்கு 7 பேர் மோதலால் பரபரப்பு : பலப்பரீட்சையில் இருப்பது 3 பேர் தான்
ADDED : அக் 06, 2011 09:37 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி தலைவர் பதவிக்கு ஏழு கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் மூன்று பேர் மட்டுமே பலப்பரீட்சையில் உள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சி தலைவர் பதவியை குறிவைத்து அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., தே.மு.தி.க.,- காங்., - இ.கம்யூ., - பா.ஜ., ஆகிய ஏழு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் அனைவரும் ஒரே மாதிரியான வாக்குறுதிகளுடன் மக்களை தேடிச்சென்று பிரசாரம் செய்கின்றனர். அ.தி.மு.க., வேட்பாளர் கிருஷ்ணகுமார் நகராட்சி துணைத்தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அ.தி.மு.க., நகர செயலாளராகவும் உள்ளார். நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், நண்பர்கள் மூலம் தினமும் மூன்று வார்டுகள் வீதம் பிரசாரம் செய்கிறார்.
உடுமலை எம்.எல்.ஏ., ஜெயராமன், பொள்ளாச்சி எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி, எம்.பி., சுகுமார் ஆகியோர் அ.தி.மு. க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதால் பரபரப்பு நிலவுகிறது. தி.மு.க., வேட்பாளர் தென்றல் செல்வராஜ், கட்சியின் நகர செயலாளராக இருந்தாலும், உள்ளாட்சி தேர்தலில் அவருடைய ஆதரவாளர்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார். இதனால், தி.மு.க.,வில் அதிருப்தி ஏற்பட்டு, ஒருசில வார்டுகளில் தி.மு.க., வினர் போட்டி வேட்பாளர் களாக களமிறங்கியுள்ளனர். வேட்பாளர் அறிவிப்பு வெளியானதும், தி.மு.க., வில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகர் கட்சியில் இருந்து விலகி விட்டார். இந்நிலையில், வேட்பாளர் தென்றல் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜூ ஆகியோர் மட்டும் பிரசாரம் செய்து வருகின்றனர். ம.தி.மு.க., வேட்பாளர் குகன்மில் செந்தில் என்கிற செந்தில்குமார், முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்த ம.தி.மு.க., உள்ளாட்சி தேர்தலில் களத்தில் இறங்கியுள்ளது. ம.தி.மு.க., சார்பில் 26 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ம.தி.மு.க., வேட்பாளருக்கு நகரப்பகுதியில் தனிச்செல்வாக்கு இருப்பதால் ம.தி.மு.க.,வினர் பிரசாரத்தை வேகப்படுத்தியுள்ளனர். வேட்பாளர்களை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்ததால் கட்சியினர் பம்பரமாக சுழன்று பணியாற்றுகின்றனர். தே.மு.தி.க., வேட்பாளர் பெஞ்சமின் ஜேக்கப், பொள்ளாச்சியில் 36 வார்டுகளிலும் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களுடன் சேர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அனைத்து வார்டிலும் தேர்தல் பிரசார சுற்றுப்பயண பட்டியல் தயாரித்து மக்களை சந்தித்து ஓட்டு சேகரிக்கிறார். எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் உள்ளாட்சி தேர்தலை தனித்து சந்திப்பதால் தே.மு.தி.க.,வினர் தேர்தல் பணியில் பதட்டத்துடன் ஈடுபட்டுள்ளனர். காங்., வேட்பாளர் ஜோதிமணி, பா.ஜ., வேட்பாளர் ஞானவடிவேல் விஜயராஜன் ஆகியோர் எவ்வித பரபரப்பும் இல்லாமல் வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களுடன், தினமும் இரண்டு வார்டுகள் வீதம் பிரசாரம் செய்கின்றனர். இ.கம்யூ., கட்சியில் நகராட்சி தலைவர் பதவிக்கும், இரண்டு வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதனால், தலைவர் பதவிக் போட்டியிடும் மோகன்ராஜ், யாருடைய ஆதரவும் இல்லாமல் 'சோலோவாக' பிரசாரம் செய்கிறார். நகராட்சி தலைவர் பதவியை குறிவைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்கள் ஏழு பேர் களத்தில் இருந்தாலும், அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., வேட்பாளர்களிடையே மட்டுமே பலப்பரீட்சை நிலவுகிறது. தலைவர் வேட்பாளர்கள் ஒருபக்கம் சென்றாலும், அந்தந்த வார்டுகளில் 'சிட்டிங்' கவுன்சிலர்கள் இதுவரை வார்டுகளில் மேற்கொண்ட பணிகளை பட்டியலிட்டு மீண்டும் வாய்ப்பு கேட்டு மக்களை தேடி சென்று கொண்டுள்ளனர். மற்ற கட்சி வேட்பாளர்களும் சுயேச்சைகளும் வார்டுகளில் நிலவும் பிரச்னைகளை மையப்படுத்தி ஓட்டு சேகரிக்கின்றனர். ஒவ்வொரு தெருவிலும் கட்சியினர் 50 பேர் கும்பலாக சூழ்ந்து நின்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் பொள்ளாச்சியில் தேர்தல் களைகட்டியுள்ளது. கைகொடுக்கும் திட்டங்கள் : பொள்ளாச்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்பட்ட பிரதான திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை. நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இடத்தை அரசு மருத்துவமனைக்கு ஒப்படைத்து, நவீன மருத்துவ வசதிகளுடன் மாவட்ட தலைமை மருத்துவமனை கொண்டு வருவோம் என்பது அ.தி.மு.க.,வின் பிரதான வாக்குறுதியாக உள்ளது. ஆனால், தி.மு.க., உள்ளிட்ட மற்ற கட்சி வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு வலுவான காரணங்களை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றனர்.


