இலங்கை கடற்படை உதவியால் தப்பிய மீனவர்கள்
இலங்கை கடற்படை உதவியால் தப்பிய மீனவர்கள்
இலங்கை கடற்படை உதவியால் தப்பிய மீனவர்கள்
ADDED : ஆக 03, 2011 12:52 AM
மண்டபம் : இலங்கை கடற்படையிடம் சிக்கிய மண்டபம் மீனவர்கள், அவர்களின் உதவியால் இந்தியா திரும்பினர்.
மண்டபம் வடக்கு கடல் பகுதியிலிருந்து, கடந்த 30ம் தேதி, 200க்கும் அதிகமான விசைப்படகுகள், மீன்பிடிக்க கடலுக்குச் சென்று 31ம் தேதி கரை திரும்பின. தயூப்கான் என்பவரது விசைப்படகில் கணேசன், மணி, குருசாமி, ராஜாக்கிளி என, நான்கு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நடுக்கடலில் இன்ஜின் பழுதாகி நின்றது. காற்றின் வேகத்தில் படகு, இலங்கை கடற்பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டது. அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை, மீனவர்களையும் படகையும் மீட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒரு படகு, சர்வதேச எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தது. இலங்கை கடற்படையினர் அந்த படகை அழைத்து, மண்டபம் தயூப்கானின் விசைப்படகை கயிற்றால் கட்டி இழுத்துச் செல்லுமாறு கூறினர். படகுகள், நேற்று முன்தினம் இரவு கோட்டைப்பட்டினம் வந்து சேர்ந்தன. இலங்கை கடற்படையிடம் பிடிபட்டு, உடனே அவர்கள் உதவியால் கரை திரும்பிய மகிழ்ச்சியில் மீனவர்கள் உள்ளனர்.


