ADDED : அக் 08, 2011 12:28 AM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்வதற்காக, ஏழு பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அ.தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.திருப்பூர் மாநகராட்சியில் மேயர் மற்றும் 60 வார்டுகளிலும் அ.தி.மு.க., களம் இறங்கியுள்ளது.
தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, மாநகர் மாவட்ட செயலாளர் தலைமையில் பணிக்குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமைச்சர் சண்முகவேலு தலைமையில் தேர்தல் பணிக்குழுவை கட்சி தலைமை அறிவித்துள்ளது. அமைச்சர் தலைமையில், எம்.பி.,சிவசாமி, மாவட்ட செயலாளர் ஆனந்தன், அரசு கேபிள் கார்ப்பரேஷன் தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, தெற்கு தொகுதி செயலாளர் மனோகரன், நல்லூர் நகர செயலாளர் முத்து ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாநகராட்சியில் அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - மா.கம்யூ., - இ.கம்யூ., - காங்., - பா.ம.க., என பல்வேறு கட்சிகளும் தனித்தனியாக களம் இறங்கியுள்ளன. ஒவ்வொரு வார்டிலும் பலத்த போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, தேர்தல் பணியை கவனத்துடன் மேற்கொள்வதற்காக, திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., தேர்தல் பொறுப்பாளரான, அமைச்சர் சண்முகவேலு மண்டல பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.முதலாவது மண்டலத்துக்கு அரசு கேபிள் கார்ப்பரஷேன் தலைவர் ராதாகிருஷ்ணன், இரண்டாவது மண்டலத்துக்கு எம்.எல்.ஏ., ஆனந்தன், மூன்றாவது மண்டலத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, நான்காவது மண்டலத்துக்கு எம்.பி., சிவசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டலத்துக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் தேர்தல் பணி மேற்கொண்டு, கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மண்டல பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வேட்பாளர் தேர்வில் பலத்த அதிருப்தி நிலவியதால், நகரப்பகுதி வார்டுகளில் கட்சியினர் தேர்தல் பணியில் அதிக அக்கறை செலுத்தவில்லை. அதிருப்தியாளர்களை சமரசப்படுத்தி, தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக மேற்கொள்ள, மண்டல பொறுப்பாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.


