/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/தண்ணீரில் தத்தளிக்கும் மாணவர்கள் தவிப்பு : தீவாக மாறிய அரசு காது கேளாதோர் பள்ளிதண்ணீரில் தத்தளிக்கும் மாணவர்கள் தவிப்பு : தீவாக மாறிய அரசு காது கேளாதோர் பள்ளி
தண்ணீரில் தத்தளிக்கும் மாணவர்கள் தவிப்பு : தீவாக மாறிய அரசு காது கேளாதோர் பள்ளி
தண்ணீரில் தத்தளிக்கும் மாணவர்கள் தவிப்பு : தீவாக மாறிய அரசு காது கேளாதோர் பள்ளி
தண்ணீரில் தத்தளிக்கும் மாணவர்கள் தவிப்பு : தீவாக மாறிய அரசு காது கேளாதோர் பள்ளி
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் உள்ள அரசு காது கேளாதோர் மாணவர்கள் பள்ளி மற்றும் விடுதியை சுற்றி, மழைநீர் சூழ்ந்திருப்பதால், மாணவ, மாணவியர் தண்ணீரில் தத்தளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2002-03ம் ஆண்டு, சம்பூர்ண கிராமிய ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளிக் கட்டடமும், 29 லட்சம் ரூபாய் மதிப்பில் விடுதி கட்டடமும் கட்டப்பட்டது. பள்ளி அமைந்துள்ள இடம் தாழ்வானப் பகுதி என்பதால், மழை நீர் தேங்கியது. இதைத் தடுக்க, சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. அதைத் தொடர்ந்து, 2007-08ம் ஆண்டு, சிறு சேமிப்பு ஊக்களிப்பு திட்டத்தின் கீழ், சுற்றுச்சுவர் கட்ட ஆறு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், பணி முற்றுப்பெறவில்லை. அடுத்து, 2009-10ம் ஆண்டு, பள்ளி கட்டடம் மற்றும் விடுதிக்கு செல்ல, ஒன்றியப் பொது நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட, இரண்டு லட்சம் ரூபாயில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், இப்பணிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. விடுதி கட்டடத்தில், ஜன்னல்கள் பெயர்ந்து விட்டன. சுற்றுச்சுவர் கட்டும் பணி முழுமை பெறாததால், கடந்த வாரம் பெய்த மழையில், பள்ளி மற்றும் விடுதியை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது.
பள்ளி அமைந்துள்ள இடம் அருகிலேயே சிறு குளம் உள்ளது. அங்கிருந்து வரும் தண்ணீர் வெளியேற வழியின்றி, பள்ளி மற்றும் விடுதியை சுற்றி தேங்கி நிற்கிறது. விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள், தண்ணீரில் நடந்து பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. நான்கு புறமும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், பள்ளி மற்றும் விடுதி தீவுபோல் காட்சி அளிக்கிறது. ஜன்னல் கதவு உடைந்துள்ளதால், மாணவ, மாணவியர், இரவு குளிர் மற்றும் கொசுக்கடியால் கடும் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் பாண்டியன் கூறும்போது,'குறைபாடுகள் குறித்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முடிந்தால், தண்ணீர் தேங்குவது குறையும்' என்றார். ஊராட்சி தலைவரின் கணவர் முருகேசன் கூறும்போது, 'சுற்றுச்சுவர் கட்டும் பணியை, டெண்டர் எடுத்தவர் பணி செய்யாமல் உள்ளார். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளேன். டெண்டர் எடுத்தவர் பணி செய்யாவிட்டால், டெண்டரை ரத்து செய்துவிட்டு, மறு டெண்டர் விடுங்கள் எனக் கூறினேன். அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்' என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரசாமியை கேட்டபோது,'பொறியாளரை நேரில் அனுப்பி ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கிறேன்' என்றார்.


