ஒடிசாவில் எம்.எல்.ஏ., சுட்டுக்கொலை: பாதுகாவலரும் பலியானார்
ஒடிசாவில் எம்.எல்.ஏ., சுட்டுக்கொலை: பாதுகாவலரும் பலியானார்
ஒடிசாவில் எம்.எல்.ஏ., சுட்டுக்கொலை: பாதுகாவலரும் பலியானார்

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வும், அவரது பாதுகாப்பு அதிகாரியும், பொது நிகழ்ச்சி ஒன்றில், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது, அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் ஜகபந்து மாஜி. இவர், நவராங்பூர் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று சென்றிருந்தார். இங்குள்ள கோனா என்ற கிராமத்தில், பொது மக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., மாஜி, பொதுமக்களுக்கு பட்டாக்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென நான்கு மர்ம நபர்கள் அங்கு வந்தனர். மேடையை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், எம்.எல்.ஏ., ஜகபந்து மாஜியும், அவரது பாதுகாப்பு அதிகாரி பட்ரோ என்பவரும், உயிரிழந்தனர். இதையடுத்து, மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம், ஒடிசாவில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கொலை நடந்த இடம், நக்சலைட்கள் அதிகம் உள்ள பகுதி. எனவே, இந்த கொலை யை, நக்சலைட்கள் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருந்தாலும், கொலைக்கான காரணங்கள் குறித்து, பல்வேறு கோணங்களின் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்றனர். எம்.எல்.ஏ., கொலை க்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கடும் கண்டனம் தெரிவித்துள் ளார். அவர் கூறுகையில், 'எம்.எல்.ஏ., மாஜி, நடக்கும் திறன் இல்லாதவர். பழங்குடியின தலைவர்களில் முக்கியமானவர். அவரை கொலை செய்திருப்பது, கண்டனத்துக்குரியது' என்றார்.


