ADDED : செப் 06, 2011 10:29 PM
கும்பகோணம்: பட்டா வழங்க, 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை, தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி,49; ஆட்டோ டிரைவர். இவரின் தாய் பட்டம்மாள், 2002ல், 6,761 சதுர அடி மனை, அதில் உள்ள வீட்டை, பார்த்தசாரதிக்கு செட்டில்மென்டாக எழுதினார். 2010ல், பட்டம்மாள் இறந்தார். தாயார் இறந்த பிறகு, தனக்கு செட்டில்மென்டாக எழுதிக் கொடுக்கப்பட்ட இடத்திற்கு, தனிபட்டா கோரி ஜனவரி மாதம், வி.ஏ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்தார்; திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த, ஜமாபந்தியிலும் மனு அளித்தார். கோவிந்தபுரம் வி.ஏ.ஓ., பணியிடம் காலியாக இருப்பதால், திருபுவனம் வி.ஏ.ஓ., ரவிக்குமார்,55, கூடுதல் பொறுப்பை கவனித்து வந்தார். ஜமாபந்தியில், பார்த்தசாரதி கொடுத்த மனு மீதான விசாரணை, ரவிக்குமாரிடம் வந்தது. இதையடுத்து, பார்த்தசாரதியிடம் பட்டா வழங்க, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். 'அவ்வளவு தொகை என்னால் கொடுக்க இயலாது' என கூறியதற்கு, '4,000 ரூபாய் கொடுத்தால் தான் பட்டா வழங்க இயலும்' என, அவர் தெரிவித்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பார்த்தசாரதி, நேற்று முன்தினம் காலை, தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். திருபுவனத்திற்கு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வந்து, வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே, லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்திருந்தனர். அப்போது, ரசாயனப் பொடி தடவிய, 4,000 ரூபாயை வி.ஏ.ஓ., ரவிக்குமாரிடம் பார்த்தசாரதி கொடுத்தார். அதை அவர் வாங்கி, மேஜை டிராயரில் வைத்த ரவிக்குமாரை, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர். கும்பகோணத்தில் உள்ள அவரது வீட்டிலும், சோதனை நடத்தப்பட்டது.


