Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை நம்பர் 1ஆக மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க ஊழியர்கள் கோரிக்கை

மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை நம்பர் 1ஆக மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க ஊழியர்கள் கோரிக்கை

மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை நம்பர் 1ஆக மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க ஊழியர்கள் கோரிக்கை

மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை நம்பர் 1ஆக மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க ஊழியர்கள் கோரிக்கை

ADDED : ஜூலை 28, 2011 01:23 AM


Google News

தூத்துக்குடி : தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை மீண்டும் தமிழகத்தில் நம்பர் 1 என்ற நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மருத்துவத்துறை அனைத்து ஊழியர் மற்றும் சுகாதார பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை அனைத்து ஊழியர் மற்றும் சுகாதார பணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கமாலுதீன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது; தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக இருந்த போது மொத்த படுக்கை எண்ணிக்கை 617. அப்பொழுது கடைநிலை பணியாளர்களாக சுமார் 130 பேர் பணிபுரிந்து வந்தனர். அதன் பின்னர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆஸ்பத்திரி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் இங்கு பணிபுரியும் கடைநிலை பணியாளர்களின் எண்ணிக்கை 110 ஆக தற்போது உள்ளது. மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி என்ற காரணத்தினால் புதிய துறைகள், புதிய கட்டடங்கள், புதிய வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கு பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரிக்கப்படவில்லை.



மிகவும் குறைவான பணியாளர்களே பணிபுரிவதால் பணியாளர்கள் பணிசுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடந்த திமுக., ஆட்சியில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படாமல் 500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் அப்போதைய துணை முதல்வரால் திறக்கப்பட்டது. புதிய கட்டடத்திற்கென புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. நோயாளிகள் எண்ணிக்கை கூடுதல் குறைவாக இருந்தாலும் பணிபுரியும் பணியாளர்களின் பணி என்பது அதிகமாகவே உள்ளது. 617 மொத்த படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரிக்கு 130 பணியாளர்கள் என்ற நிலை தற்பொழுது 1117 மொத்த படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரிக்கு 109 பணியாளர்கள் என்பது ஏற்புடையதல்ல. மேலும் இது சம்பந்தமாக கடந்த ஆட்சி காலத்தில் பல கோரிக்கைகள் வைத்தும் பயன் இல்லை. தங்களின் கடந்த ஆட்சிகாலத்தில் தூத்துக்குடி ஆஸ்பத்திரி எல்லாவற்றிலும் நம்பர் 1 என்ற நிலைமை இருந்தது. ஆனால் இன்று சுகாதாரம் என்றால் என்ன? என்று கேட்கின்ற நிலையில் இருந்து வருகிறது.



ஏற்கனவே ஆள் பற்றாக்குறை உள்ள நேரத்தில் எலக்ட்ரிசன், பிளம்பர், சமையல் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பணிகளுக்கு ஆஸ்பத்திரி பணியாளர்களையே நியமித்துள்ளனர். இதனால் இன்னமும் பணிசுமை அதிகரித்துள்ளது. தங்களது ஆட்சி காலத்தின் போது நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் ஒப்பந்த பணியாளர்கள் கடந்த ஆட்சியின் போது நிரந்தரம் செய்யப்படவில்லை. பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தரவும், போர்கால அடிப்படையில் தேவையான ஊழியர்களை நியமித்து மீண்டும் மாநிலத்தில் 1 ஆஸ்பத்திரியாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us