செஞ்சி அருகே மேலும் சமணப் படுக்கைகள்
செஞ்சி அருகே மேலும் சமணப் படுக்கைகள்
செஞ்சி அருகே மேலும் சமணப் படுக்கைகள்
செஞ்சி : செஞ்சி அருகே மேலும் சமணப் படுக்கைகள் இருப்பதை, ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து அவர் கூறியதாவது: செஞ்சி பகுதியில் சமீபத்தில் நடத்திய ஆய்வில், சோழங்குணம் கிராமத்தில் உள்ள கோபுரம் குன்றில், தரைப்பகுதியிலிருந்து 10 மீட்டர் உயரத்தில் தெற்கு மற்றும் கிழக்கு திசையில் பெரிய அளவிலான பொந்துக்கள் காணப்படுகின்றன. கிழக்கில் உள்ள பொந்தில், தமிழகத்திற்கு வரும் வட மாநில ஜைனத் துறவிகள் தங்கி தியானம் செய்வர் என, இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த பொந்துகளை முற்காலம் தொட்டே ஜைனத் துறவிகள் பயன்படுத்தி உள்ளனர். தெற்கில் உள்ள பொந்தில், 16-17ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று உள்ளது. இதில், புலியுடன் போரிடும் வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதில், இறந்து கிடக்கும் நாயின் சிற்ப முகத்தையும் வடித்துள்ளனர். இந்த நடுகல்லை, கோபுரம் குன்று கண்ணன் என இப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் இப்பகுதி காடுகளில் முன்பு புலிகள் இருந்தது தெரிய வருகிறது.
கெங்கம்பூண்டி கிராமத்தில் ஊருக்கு ஒரு கி.மீ., தொலைவில், மலைக் குன்று ஒன்று உள்ளது. இக்குன்றில் 20 மீட்டர் உயரத்தில் தென் கிழக்கில் குகை தளம் ஒன்று உள்ளது. இதன் முன்பாக வெட்ட வெளி பாறையில், தெற்கு நோக்கி ஐந்து படுக்கைகளை வடித்துள்ளனர். இதே போல், குகையின் உள்ளே கிழக்கு நோக்கி ஐந்து படுக்கை, மேற்கு நோக்கி ஐந்து படுக்கை என மொத்தம் 15 படுக்கைகள் உள்ளன. அனைத்திலும் தலைத் திண்டுகளையும் அமைத்துள்ளனர். இவை இதுவரை கண்டறியப்படாத சமணப் படுக்கைகள். இப்பகுதியை பஞ்ச பாண்டவர் குன்று என சிலரும், சமணப் பள்ளிக்கூடம் என சிலரும் குறிப்பிடுகின்றனர். இந்த குன்றின் வடபகுதியில், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்ததற்கான கல்வட்டங்களும், பானை ஓடுகளும் காணப்படுகின்றன. இது, மூன்றாயிரம் ஆண்டுகளில் இருந்து இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதையும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சமணத் துறவிகள் உறைவிடமாக பயன்படுத்தியிருப்பதையும் அறிய முடிகிறது. இங்கிருந்த கற்சிற்பம் ஒன்று திடீரென காணவில்லை என, கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த கிராமத்தின் அருகில் கள்ளப்புலியூர், வெடால், சீயமங்கலம் ஆகிய ஊர்களில் இப்போதும் ஜைன மதத்தினர் வசித்து வருகின்றனர். இவ்வாறு அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.


