Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடிக்கு மீண்டும் பெண் மேயர் தான் நாளை மறுநாள் அதிகார பூர்வ அரசு அறிவிப்பு

தூத்துக்குடிக்கு மீண்டும் பெண் மேயர் தான் நாளை மறுநாள் அதிகார பூர்வ அரசு அறிவிப்பு

தூத்துக்குடிக்கு மீண்டும் பெண் மேயர் தான் நாளை மறுநாள் அதிகார பூர்வ அரசு அறிவிப்பு

தூத்துக்குடிக்கு மீண்டும் பெண் மேயர் தான் நாளை மறுநாள் அதிகார பூர்வ அரசு அறிவிப்பு

ADDED : செப் 10, 2011 03:45 AM


Google News
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்படுகிறது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மக்கள் தொகையுடன் கூடிய ஆண், பெண், ஆதிதிராவிட வார்டு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 மாநகராட்சிகள் ஏற்கனவே செயல்பட்டு வந்தன. தற்போது புதியதாக தூத்துக்குடி, வேலூர், திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மாநகராட்சிகள் சேர்ந்துள்ளன.

அடுத்த மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் அறிவிப்பு வரும் 16ம் தேதி வெளியிடப்படுவதாக கூறப்படுகிறது. அன்றில் இருந்து தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமலுக்கு வருகிறது. தேர்தல் ஏற்பாடுகள் மாநில தேர்தல் ஆணைய தரப்பில் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. முக்கிய அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக தரப்பிலும் தேர்தல் பணிகள் படு வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் ஆயிரக்கணக்கான பதவிகள் இருந்தாலும் இதில் மேயர் பதவி என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி என்பதால் இந்த பதவியை பிடிப்பதற்கு கடும் போட்டி உருவாகி உள்ளது. இதனால் முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் மேயர் பதவியில் தான் குறி வைக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது மாநிலம் முழுவதும் பத்து மாநகராட்சிகள் உள்ளன. இந்த பத்து மாநகராட்சிகளில் ஆண், பெண், ஆதிதிராவிடர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் பிறகு ஒவ்வொரு மாநகராட்சியிலும் இதுபோன்று ஆண், பெண், ஆதிதிராவிடர் என்று கணக்கிடப்பட்டு வைக்கப்பட்டு அதில் இருந்து பொது, பெண், ஆதிதிராவிடர்களுக்கு என்று ஒதுக்கீடு விபரத்தை அரசு முடிவு செய்து ரெடி பண்ணியுள்ளதாக கூறப்படுகிறது. நாளை மறுநாள் இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தேர்தல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இது சம்பந்தமான தகவல் கசிய துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதன்படி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி பெண் (பொது) ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், வேலூர் மாநகராட்சி ஆதிதிராவிட (பெண்) ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பெண்களுக்கு 33.3 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் பத்தில் 4 மேயர் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இதில் தூத்துக்குடி, வேலூர் பெண் மேயர்கள் ஆவதால் இன்னும் இரண்டு பெண் மேயர் எந்த மாநகராட்சிக்கு வரப் போகிறது என்பது தெரியவில்லை. மற்ற 6 மாநகராட்சி மேயர்கள் பதவி ஆண்களுக்கு ஒதுக்கப்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி பெண்ணா, ஆணா என்கிற பரபரப்பு கடந்த சில நாட்களாக நிலவி வருகிறது. அரசியல் கட்சிகள் விண்ணப்பமனுவை பெற துவங்கியதில் இருந்து இதன் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து வந்தது.

இதனால் இதற்கான அறிவிப்பு எப்போது வரும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் அதிமுக, திமுக மற்றும் பல்வேறு கட்சியினர் நச்சரித்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் எங்களுக்கு தெரியாது. அரசு தான் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று கூறிவருகின்றனர். இந் நிலையில் தூத்துக்குடி மேயர் பதவி பெண் தான் என்கிற தகவல் வெளியாகி இருப்பதாக நம்பதகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகளுடன் தேர்தல் நடக்க உள்ளது. 60 வார்டில் 17 வார்டுகள் பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. 3 வார்டுகள் ஆதிதிராவிட பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

4 வார்டுகள் ஆதிதிராவிடர் (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி 36 வார்டுகள் ஆண், பெண் போட்டியிடும் வார்டுகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 36 வார்டுகளில் பெரும்பாலும் ஆண்கள் தான் அதிகமாக போட்டியிட முக்கிய அரசியல் கட்சிகள் வாய்ப்பு அளிக்கும் என்று கூறப்படுகிறது.

பெண் (பொது) ஒதுக்கீடு வார்டுகள் விபரம்; வார்டு எண் 9, 17, 22, 40, 27,28, 24, 8, 16, 60, 13, 56, 25, 41, 38, 31, 11

ஆதிதிராவிட ஒதுக்கீடு வார்டு எண் 1, 50, 44, 3, 51, 57, 34 இதில் 50, 44, 3 ஆகிய வார்டுகளில் ஆதிதிராவிட பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுவான வார்டுகள் (ஆண், பெண்) 33, 39, 10, 52, 21, 30, 32, 46, 20, 7, 55, 14, 45, 19, 59, 37, 43, 29, 35, 4, 6, 15, 2, 23, 48, 58, 26, 36, 47, 12, 42, 53, 5, 49, 18, 54. மாநகராட்சி தேர்தல் விறுவிறுப்பு துவங்கியுள்ள நிலையில் வார்டுகள் ஒதுக்கீடு விபரம் உள்ளிட்டவை முடிந்துள்ளதால் தற்போது மாநகராட்சி தேர்தல் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us