"டி.ஆர்.பி., ரேட்டிங்கை மட்டும் பார்க்காதீங்க'
"டி.ஆர்.பி., ரேட்டிங்கை மட்டும் பார்க்காதீங்க'
"டி.ஆர்.பி., ரேட்டிங்கை மட்டும் பார்க்காதீங்க'
ADDED : ஆக 09, 2011 02:14 AM
புதுடில்லி : 'மீடியாக்கள், செய்திகளை வெளியிடும்போது, அந்த செய்திகளுக்கு அடிப்படையும், ஆதாரமும் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்'என, மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கூறினார். மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது:மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், பார்லிமென்டை நடத்த விடமாட்டோம் என, எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இது எந்த வகையிலும் நியாயம் இல்லை. கணக்கு தணிக்கை துறையின் நடவடிக்கைகள், முழுமையாக முடியாத சூழலில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நியாயமற்றது. இந்த விவகாரத்தில், மீடியாக்களின் செயல்பாடுகள் குறித்தும் கூற வேண்டும். மீடியாக்களின் டி.ஆர்.பி., ரேட்டிங் தொடர்பான விவகாரத்தில், தலையிட விரும்பவில்லை. அதேநேரத்தில், செய்திகள் வெளியிடும்போது, அந்த செய்திகளுக்கு அடிப்படையும், ஆதாரமும் உள்ளதா என்பதை, மீடியாக்கள் உறுதி செய்ய வேண்டும். வெளியிடப்பட்ட செய்திகளுக்கு ஆதாரம் கேட்கப்பட்டால், அதை மீடியாக்கள் கொடுக்க வேண்டும். முதலில் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டு, அதற்கு பின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புங்கள். இவ்வாறு அம்பிகா சோனி கூறினார்.
ஐகோர்ட் தலைமை நீதிபதி மீதான புகாரை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
புதுடில்லி : உ.பி., முதல்வர் மாயாவதிக்கு ஆதரவாக செயல்பட்டதாக, அலகாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதி மீது கூறப்படும் புகாரை ஏற்க, சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. மாயாவதி மீதான தாஜ் ஓட்டல் வழக்கு, அலகாபாத் கோர்ட்டில் நடந்தது. கடந்தாண்டு ஜூன் 26ம் தேதி அலகாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எப்.ஐ.ரிபெல்லோ நியமிக்கப்பட்டார். அதற்கு அடுத்த மாதம் 21ம் தேதி ரிபெல்லோவை முதல்வர் மாயாவதி சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து மாயாவதியின் உதவியாளர் எஸ்.சி.மிஸ்ராவும், தலைமை நீதிபதியை சந்தித்துப் பேசினார். 'இவர்கள் சந்திப்புக்கு பிறகு, தாஜ் ஓட்டல் வழக்கில் மாற்றம் ஏற்பட்டது. தலைமை நீதிபதி ரிபெல்லோ, மாயாவதிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார், எனவே, இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்' எனக் கோரி, லக்னோவைச் சேர்ந்த காசிநாத் யாதவ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருந்தார். இந்த மனுவை ரவீந்திரன் மற்றும் ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.மனுதாரர் சார்பில் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார்.'முதல்வர் மாயாவதியும், தலைமை நீதிபதியும் சந்தித்தது மரியாதை நிமித்தமானது. ஐகோர்ட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் விவாதிப்பது மரபு. இந்த சந்திப்பின் காரணமாக தலைமை நீதிபதி, முதல்வருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார் என்பது ஏற்க முடியாது. தற்போது இந்த வழக்கில் வாதாடும் பிரசாந்த் பூஷன் நீதிபதிகளை சந்தித்து பேசுகிறார். இதனால், அவர் சில வழக்கில் சதி செய்து விட்டதாக கூற முடியுமா? எனவே, தாஜ் ஓட்டல் வழக்கில் தலைமை நீதிபதி ரிபெல்லோ, மாயாவதிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறும் புகாரை, ஏற்க முடியாது' எனக் கூறி இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.


