Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலம் டவுன் பஞ்.,தேர்தல் அதிமுக.,-திமுக.,கடும் போட்டி

குற்றாலம் டவுன் பஞ்.,தேர்தல் அதிமுக.,-திமுக.,கடும் போட்டி

குற்றாலம் டவுன் பஞ்.,தேர்தல் அதிமுக.,-திமுக.,கடும் போட்டி

குற்றாலம் டவுன் பஞ்.,தேர்தல் அதிமுக.,-திமுக.,கடும் போட்டி

ADDED : அக் 07, 2011 02:17 AM


Google News

குற்றாலம் : குற்றாலம் டவுன் பஞ்.,தேர்தலில் அ.தி.மு.க.,-தி.மு.க., வேட்பாளர்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் சிறப்பு நிலை டவுன் பஞ்.,தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இங்கு 8 வார்டுகள்தான் உள்ளன. மிக சிறிய டவுன் பஞ்., பகுதியான குற்றாலம் சிறந்த சுற்றுலா ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டு தோறும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் குற்றாலத்தில் 790 ஆண் வாக்காளர்களும், 783 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 1,573 வாக்காளர்கள்தான் உள்ளனர். இருப்பினும் குற்றாலம் டவுன் பஞ்.,தேர்தல் ஒரு சட்டசபை தேர்தலை விஞ்சும் அளவிற்கு இருக்கும். இதனால் இங்குள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் முடியும் வரை ராஜ மரியாதைதான் நடக்கும்.



குற்றாலம் டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு லதா (அதிமுக), ரேவதி (திமுக), லட்சுமி (காங்.,) போட்டியிடுகின்றனர். 1வது வார்டில் கணேஷ் தாமோதரன் (அதிமுக) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார். 2,3,4வது வார்டில் தலா 4 பேரும், 5,6,8வது வார்டில் தலா 2 பேரும், 7வது வார்டில் 6 பேரும் போட்டியிடுகின்றனர். அனைத்து வார்டுகளிலும் அ.தி.மு.க.,-தி.மு.க.,வேட்பாளர்களுக்கிடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.



வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் வெற்றி பெற்றதும் என்னென்ன வளர்ச்சி பணிகள் செய்வோம் என பட்டியலிட்டுள்ளனர். இவர்களில் தலைவர் பதவிக்கான அ.தி.மு.க.வேட்பாளர் லதா தனது வாக்குறுதி பற்றி கூறியதாவது:



தமிழக அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் குற்றாலம் டவுன் பஞ்., பகுதி பொதுமக்களுக்கு தாமதமின்றி கிடைத்திட நடவடிக்கை எடுப்பேன். சலவை தொழிலாளர்களுக்கு படித்துறை (டோபிகானா) வசதி செய்யப்படும். அவர்களுக்கு நடைபாதை மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பேன்.



ஐந்தருவி வெண்ணமடை குடியிருப்பு, கல்குவாரி மற்றும் சலவை தொழிலாளர் குடியிருப்பு மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா பெற்றுக் கொடுக்கப்படும். ஐந்தருவியில் இருந்து வெண்ணமடை குடியிருப்பு பகுதி மக்களுக்கு குடிநீர் வசதி அமைத்து கொடுப்பேன். கேரளா மாநிலம் தென்மலையில் அமைக்கப்பட்டிருப்பது போன்று குற்றாலத்தில் வனத்துறையினரின் ஒத்துழைப்போடு எக்கோ டூரிசம் அமைக்கப்படும். போலீஸ் குடியிருப்புகள் கட்டப்படும். தேவையான இடங்களில் வாறுகால் வசதி ஏற்படுத்தப்படும். பொதுமக்களின் தேவைகளுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு முழு சுகாதார பகுதியாக மாற்றப்படும். உலக சுற்றுலா வரைபடத்தில் குற்றாலத்தை இடம் பெற வைப்பேன்.



வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவரும் வகையில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். பஜார் பகுதியில் வியாபாரிகள் வாடகை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் முழுமையாக தீர்க்கப்படும். மேலும் நான் ஓட்டு கேட்க செல்லும் போது பொதுமக்கள் என்னிடம் வழங்கி வரும் கோரிக்கை மனுக்கள் மீது நான் வெற்றி பெற்றவுடன் துரித நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அ.தி.மு.க.,வேட்பாளர் லதா கூறினார்.



தி.மு.க.வேட்பாளர் ரேவதி கூறியதாவது: கடந்த தி.மு.க.ஆட்சியில் நான் குற்றாலம் டவுன் பஞ்.,தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அப்போதைய முதல்வர் கருணாநிதி, அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின், அப்போதைய தென்காசி எம்.எல்.ஏ.,கருப்பசாமி பாண்டியன் ஒத்துழைப்போடு குற்றாலத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டேன். மத்திய சுற்றுலா வரைபடத்தில் குற்றாலம் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.



குற்றாலத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கும், குற்றாலத்திற்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. மெயின் அருவி பகுதியில் கார் பார்க்கிங் விஸ்தரிப்பு செய்யப்பட்டது. அனைத்து அருவி பகுதியிலும் நவீன கழிப்பறை வசதி அமைக்கப்பட்டது. பூங்காக்கள் அமைக்கப்பட்டது. 10 இடங்களில் ஹைமாஸ் லைட் வசதி செய்து கொடுக்கப்பட்டது.



மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால் குற்றாலநாதர் கோயில் முகப்பு பகுதியும், கார்பார்க்கிங் பகுதியும் இணையும் வகையில் சிற்றாற்றின் மீது புதிதாக பாலம் கட்டப்பட்டது. நவீன நடைமேடை அமைக்கப்பட்டது. 50 லட்சம் ரூபாய் செலவில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. சிறு வியாபாரிகளுக்கு தரக்குத்தகை ரத்து செய்யப்பட்டது.



குற்றாலநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ரதவீதிகள் சீரமைக்கப்பட்டன. சித்ரசபை மெருகூட்டப்பட்டு அருகில் ஹைமாஸ் லைட் வசதி அமைக்கப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு பிறகு தேர்கள் சீரமைக்கப்பட்டு தேரோட்டம் நடத்தப்பட்டது. தன்னிறைவு பெற்ற டவுன் பஞ்.,பகுதியாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.



தற்போது நான் வெற்றி பெற்றதும் சிற்றாற்றில் படித்துறை அமைக்கப்படும். இதனால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது குளிக்க முடியாத நிலை உருவாகும் போது சுற்றுலா பயணிகள் படித்துறையில் குளித்து மகிழலாம். ஆண்டு முழுவதும் சுகாதார பணிகள் மேற்கொள்ள தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். 40 ஆண்டு காலமாக மாற்றாமல் இருந்த குடிநீர் குழாய்கள் மாற்றப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் கூடுதலாக குடிநீர் தொட்டி அமைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பேன்.



சுகாதார பணியாளர்கள், டவுன் பஞ்.,பணியாளர்கள் குடியிருப்புகள் சீரமைக்கப்பட்டன. அவற்றின் தரம் மேலும் உயர்த்தப்படும். 21 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இன்னும் பட்டா வழங்கப்படாத அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டு சுகாதாரம் மிகுந்த பகுதியாக குற்றாலம் மாற்றப்படும்.



மின் தடையை சமாளிக்க மின்காற்றாலை அமைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்படும். வனத்துறையினரின் ஒத்துழைப்போடு மலை பகுதியில் செக் டேம் (தடுப்பு அணை) கட்டப்பட்டு ஆண்டு முழுவதும் அருவிகளில் தண்ணீர் விழ நடவடிக்கை எடுப்பேன். தேவைப்படுவோருக்கு இலவச வீடு கட்டி கொடுக்கப்படும். கார் பார்க்கிங் கட்டண பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து பிரச்னைகள் இல்லாமல் கார் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரின் ஒத்துழைப்போடு தீம் பார்க்க அமைத்து வேலை வாய்ப்பு பெருக்கப்படும்.



மூலிகைகள் பாதுகாக்கப்பட்டு அவற்றை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேன், கார், ஆட்டோ பார்க்கிங் வசதி செய்யப்படும். சிற்றாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டி நிலத்தடி நீர் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுய உதவிக்குழு பெண்களுக்கு சீசன் காலத்தில் கடைகள் ஒதுக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரம் உயர வருமானத்திற்கு வழிவகை செய்யப்படும். அவர்களுக்கு கடனுதவி, சுழல் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குற்றாலத்தை முன் மாதிரி டவுன் பஞ்.,பகுதியாக மாற்றிக் காட்டுவேன். இவ்வாறு தி.மு.க.வேட்பாளர் ரேவதி கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us