ADDED : ஆக 06, 2011 01:50 AM
கோவை : பிஷப் மாணிக்கம் துரையின் பாஸ்போர்ட் கேட்பு மனுவை, கோவை கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது.
கோவை மண்டல சி.எஸ்.ஐ., திருச்சபை பேராயராக இருந்தவர் மாணிக்கம் துரை. இவர் மீது, திருச்சபை உறுப்பினர்கள் மோசடிப் புகார் கூறியதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மூன்று கோடி ரூபாய் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணிக்கம் துரையின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.
இவ்வழக்கு, தற்போது மாவட்டத் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடக்கிறது. சமீபத்தில், 'அவசர வேலையாக வெளிநாடு செல்ல இருப்பதால், முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டை வழங்க வேண்டும்' என்று கோரி, கோர்ட்டில் மாணிக்கம் துரை சார்பில், மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, சி.பி.சி.ஐ.டி., தரப்பில், எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு மனுக்கள் மீதான வாதம், நேற்று முன்தினம் நடந்தது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி சீனிவாசன், பிஷப் மாணிக்கம் துரையின் பாஸ்போர்ட் கேட்பு மனுவை, 'டிஸ்மிஸ்' செய்து, நேற்று உத்தரவிட்டார்.