Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரயில் நிலையத்தில் முன்பதிவு வசதியின்றி பொதுமக்கள் அவதி

ரயில் நிலையத்தில் முன்பதிவு வசதியின்றி பொதுமக்கள் அவதி

ரயில் நிலையத்தில் முன்பதிவு வசதியின்றி பொதுமக்கள் அவதி

ரயில் நிலையத்தில் முன்பதிவு வசதியின்றி பொதுமக்கள் அவதி

ADDED : ஆக 07, 2011 12:56 AM


Google News

அம்பத்தூர் : அம்பத்தூர் ரயில் நிலையத்தில், வெளிமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி வேண்டுமென, பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை புறநகர் பகுதியில் உள்ள, அம்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

மேலும், தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டை, 1964ல் அம்பத்தூரில் 1,250 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது.இத்தொழிற்பேட்டையில், ஆட்டோ மொபைல், டெக்ஸ்டைல்ஸ், இன்ஜினியரிங் கம்பெனிகள் என, 1,600க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. 1,500க்கும் மேற்பட்ட 'டைனி' எனப்படும் குறுந்தொழிற்சாலைகளும் உள்ளன. இதன்படி, ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில், வட மாநிலங்கள் மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.இவர்கள், தினமும் அலுவலகங்களுக்கு, ரயில்களில் தான் வந்து செல்கின்றனர்.



வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலும் ரயில்களையே பயன்படுத்துகின்றனர். இங்கு பணிபுரிபவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில்களில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால், ஆவடி, எழும்பூர் அல்லது சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று தான், முன்பதிவு செய்ய வேண்டும்.இதனால், அம்பத்தூர் தொழிற்பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள, அயப்பாக்கம், திருமுல்லைவாயல், பாடி போன்ற சுற்று வட்டாரப் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் லட்சக்கணக்கானோர், அம்பத்தூர் ரயில் நிலையத்தில், முன்பதிவு செய்யும் வசதியின்றி பாதிப்படைகின்றனர்.சுற்று வட்டாரப் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் லட்சக்கணக்கானோர் நலன் கருதி, தென்னக ரயில்வே, புறநகரில் மிக முக்கிய பகுதியாக உள்ள, அம்பத்தூர் ரயில் நிலையத்திலும், முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று, தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.ஓய்வு பெற்ற அரசு கிராம நிர்வாக அதிகாரி என்.ராமகிருஷ்ணன் கூறியதாவது: ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டை அமைந்துள்ள சென்னை புறநகரில், மிக முக்கிய பகுதியாக அமைந்துள்ள அம்பத்தூரில், வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர், பணிபுரிந்து வருகின்றனர்.



அம்பத்தூர் ரயில் நிலையத்தில், டிக்கெட் முன்பதிவு மையம் அமைத்தால், இங்கு பணியாற்றி வரும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன் பெறுவர்.அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி உமாகாந்த் கூறியதாவது: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர், இங்குள்ள ஏற்றுமதி நிறுவனம் மற்றும் கட்டட வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம். பத்து, பதினைந்து பேர் சேர்ந்து ஒன்றாகத் தங்கி பணிபுரிந்து வருகிறோம். நாங்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, பீகாருக்கு செல்வோம். எங்களைப் போல் ஏராளமானோர் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். ஊருக்குச் செல்லும் சமயங்களில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு, மிகவும் சிரமமாக இருக்கிறது. அம்பத்தூர் ரயில் நிலையத்தில், டிக்கெட் முன்பதிவு மையம் அமைத்தால், எங்களைப் போல் இங்கு பணியாற்றி வரும், ஏராளமான தொழிலாளிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.இவ்வாறு பயணிகள் கூறினர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us