Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பால் குளிரூட்ட கட்டமைப்பு வசதிகள் இல்லை

பால் குளிரூட்ட கட்டமைப்பு வசதிகள் இல்லை

பால் குளிரூட்ட கட்டமைப்பு வசதிகள் இல்லை

பால் குளிரூட்ட கட்டமைப்பு வசதிகள் இல்லை

ADDED : செப் 22, 2011 01:20 AM


Google News

உடுமலை : திருப்பூர், கோவை மாவட்டத்தில் உற்பத்தியாகும் பாலை கொள்முதல் செய்து குளிரூட்ட தேவையான கட்டமைப்பு வசதிகளை ஆவின் மேம்படுத்தாததால், மூன்று லட்சத்திற்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.திருப்பூர், கோவை மாவட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் பால் உற்பத்தி முக்கிய தொழிலாக உள்ளது.

உற்பத்தி செய்யப்படும் பாலை கொள்முதல் செய்ய இரண்டு மாவட்டங்களிலும் 600 கொள்முதல் நிலையங்களும், மூன்று லட்சத்திற்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்களும் உள்ளனர்.இரண்டு மாவட்டங்களிலிருந்தும் நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் பால், ஆவின் கோவை ஒன்றிய நிர்வாகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. பச்சார்பாளையத்திலுள்ள ஆவின் குளிரூட்டு நிலையம் 1.5 லட்சம் லிட்டரும், அன்னூர், வீரபாண்டி(திருப்பூர்), சுல்தான்பேட்டை, சண்முகாபுரம்(பொள்ளாச்சி) ஆகிய துணை குளிரூட்டும் நிலையங்கள் தலா 5,000 லிட்டரும் திறன் கொண்டவை.இங்கு குளிரூட்டப்படும் பால், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பால் உற்பத்தியை கணக்கிட்டு அமைக்கப்பட்ட இந்த குளிரூட்டு நிலையங்கள் உற்பத்தி அதிகரிப்பிற்கு ஏற்ப மேம்படுத்தப்படவில்லை. இதனால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு, அவையனைத்தும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொள்முதல் விலையை குறைத்து சமன் செய்யப்படுகிறது.இதனால், ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் 25 ரூபாய்க்கும் அதிகமாக விலை கிடைக்கும் கொழுப்பு மற்றும் இதர சத்துகள் அடங்கிய பாலை வழங்கினாலும் அதிகபட்சமாக லிட்டருக்கு 17 ரூபாய் வரை மட்டுமே விலை நிர்ணயிக்கப்படுகிறது.இதற்கு குளிரூட்டும் நிறுவனங்களின் திறனை பல ஆண்டுகளாக மேம்படுத்தாமல் இருப்பதே காரணம். கிராமங்களிலுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் காலை 5.30 மணியிலிருந்தே பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பல்வேறு கிராமங்களில் கொள்முதல் செய்யப்படும் பால் ஆவின் துணை குளிர்வூட்டும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.உதாரணமாக 5 ஆயிரம் லிட்டர் திறனுடைய வீரபாண்டி மையத்திற்கு சராசரியாக 25 ஆயிரம் லிட்டர் பால் குளிர்வூட்ட அனுப்பபடுகிறது. இதனால், பணிகள் காலதாமதம் ஏற்பட்டு அதிகாலையிலிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் கெட்டுப்போகும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு, கெட்டுப்போகும் பாலுக்கான விலையை சமன் செய்ய ஒவ்வொரு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் விலை குறைக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.பாதிக்கப்படும் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் விலை கொடுத்து தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதலை பெறுகின்றன. இவ்வாறு, ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து; பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

அரசின் இலவச மாடு வழங்கும் திட்டத்தால் பால் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதிகரிக்கும் உற்பத்திக்கேற்ப ஆவின் நிறுவனத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மதுசூதனன் கூறுகையில்,'2009-10 ம் ஆண்டில் மாநிலத்தில் அதிகபட்சமாக 100 கோடி ரூபாய் வரை லாபத்தை கோவை ஆவின் ஒன்றியம் பெற்றுள்ளது. ஆனால், எவ்வித கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படாமல் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு தனியாரை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது' என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us