
தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிக்கை: சிறையில் உள்ள தன் கூட்டாளிகளை சந்தித்திருக்கிறார் மத்திய அமைச்சர் அழகிரி.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேட்டி: கூட்டணியில் இருந்தாலும், பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பது தான் காங்கிரஸ் கட்சியின் சிறப்பு. ஊழலற்ற, மதவாதம் இல்லாத மத்திய அரசை சோனியா வழிகாட்டுதலின்படி நடத்திக் கொண்டிருக்கிறார் மன்மோகன். கைதாகி உள்ள தி.மு.க., பிரமுகர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளி கிடையாது.
பத்திரிகையாளர் சோ பேட்டி: மாநில போலீஸ் ஆளுங்கட்சிக்கு அடங்கி நடப்பது போல், சி.பி.ஐ., மத்திய அரசுக்கு அடங்கி நடக்கும் அமைப்பு. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பு தளர்த்தப்படாதவரை விசாரணை ஒழுங்காக நடக்கும்.
இ.கம்யூ., தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் நல்லகண்ணு பேச்சு : வெளிநாட்டு வங்கிகளில் யார் யார் பணம் வைத்துள்ளனர் என்று கேட்டால், அரசு பட்டியல் தர இயலாது என்கிறது. சிறிய பதவிகளில் உள்ளோர் லஞ்சம் பெற்றால், அவர் ஓய்வு பெறும்போது பணி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு சேர வேண்டிய எந்த தொகையும் கிடைப்பதில்லை. ஆனால், கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கியவர்களின் பட்டியலை வெளியிட பிரதமர் மன்மோகன் சிங் மறுக்கிறார்.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பேட்டி: கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை கழிவுகளால் அப்பகுதி மக்கள் ஊனமடைகின்றனர். அந்த பகுதியில் விளையும், தேங்காயும் மாசடைந்துள்ளது. கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, தமிழகத்தின் இதர தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்க, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடுதல் டி.ஜி.பி., அர்ச்சனா ராமசுந்தரம் பேச்சு: பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் தற்போது அதிகரித்துள்ளன. இப்பிரச்னைகளில் தீர்வு காண்பதில், போலீஸ் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு அவசியம். சில போலீஸ் அதிகாரிகளுக்கு குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் குறித்தே சரியாக தெரிவதில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன் பேச்சு : ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா கைதான போது அவர் தலித் என்பதால், உயர் ஜாதியினர் அவர் மீது குற்றம் சாட்டுவதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார். ஆனால், கனிமொழி, தயாநிதி என பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. இதன் பின்னரும், காங்கிரஸ் கட்சியினருடன், கூட்டணி தொடரும் எனக் கூறுகிறார். அவர்களால், கூட்டணியைத் தொடரவும் முடியவில்லை; விடவும் முடியவில்லை.
கர்நாடக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி பேட்டி: அரசியல்வாதிகளை விட, கோர்ட்டுகளை விட, காவிரி நீர் விவகாரத்தில், விவசாயிகளுக்கு அதிகமாக தெளிவு உள்ளது. அவர்கள் பிரச்னையை அவர்கள் தான், தீர்த்துக் கொள்ள முடியும். இரு மாநில அரசாங்கமும், இரு மாநில விவசாயிகளை சந்திக்க வைத்து, பிரச்னையை சுமூகமா தீர்த்து வைக்கலாம்.
லட்சிய தி.மு.க., தலைவர் விஜய டி.ராஜேந்தர் பேட்டி: என், கட்சி சிறிய கட்சி தான், சின்னம் இல்லாத கட்சி தான். ஆனாலும், யாரின் வளர்ச்சியையும் பார்த்து நான் பொறாமைப்படவில்லை.
முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேச்சு: பா.ம.க.,வைப் பொறுத்தவரை சட்டசபைத் தேர்தலில், நமக்கு தோல்வி கிடையாது; சரிவு தான். லோக்சபா தேர்தலில், நம்மை குறிவைத்து தோற்கடித்தனர். பின், பென்னாகரம் தேர்தலில் இரண்டாவது இடம் வந்தோம். அ.தி.மு.க.,வுக்கு டெபாசிட் போனது. இப்போது அந்த கட்சி ஆட்சிக்கு வரவில்லையா?
விஜய் மக்கள் இயக்க நிறுவன தலைவர் சந்திரசேகர் பேச்சு: சட்டசபைத் தேர்தலில், 39 தொகுதிகளில் ஏழு நாள் நான் தீவிரமாக பிரசாரம் செய்தேன். இதில், 37 இடங்களில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது. அ.தி.மு.க., ஜெயிப்பதற்கு நாமும் முக்கிய காரணம் என்பதை, யாராலும் மறுக்க முடியாது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் முத்துக்கண்ணன் அறிக்கை: சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை நடத்துவதற்கு தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் ஆசிரியர்களுக்கு வழங்கி, நடப்பு கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதுடன், அதற்குத் தேவையான நிதியையும் தமிழக அரசு உடனே ஒதுக்க வேண்டும்.