Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தியாகதுருகம் ஒன்றிய சேர்மனுக்கு... அ.தி.மு.க.,- தி.மு.க., தீவிர முயற்சி

தியாகதுருகம் ஒன்றிய சேர்மனுக்கு... அ.தி.மு.க.,- தி.மு.க., தீவிர முயற்சி

தியாகதுருகம் ஒன்றிய சேர்மனுக்கு... அ.தி.மு.க.,- தி.மு.க., தீவிர முயற்சி

தியாகதுருகம் ஒன்றிய சேர்மனுக்கு... அ.தி.மு.க.,- தி.மு.க., தீவிர முயற்சி

ADDED : அக் 12, 2011 02:20 AM


Google News
தியாகதுருகம் : தியாகதுருகம் ஒன்றிய சேர்மன் பதவியை பிடிக்க அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

இரு கட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.தியாகதுருகம் ஒன்றியத்தில் 16 ஒன்றிய கவுன்சிலர் வார்டுகள் உள்ளன. தி.மு.க., ஒன்றிய செயலாளர் வசந்தம் கார்த்திகேயனின் தாய் காந்திமதி கண்ணன் கடந்த முறை சேர்மன் பதவி வகித்தார். கடந்த தேர்தலின் போது முன்னாள் ஒன்றிய செயலாளர் சதாமகாலிங்கம் மனைவி ஆண்டாளுக்கும், காந்திமதி கண்ணனுக்கும் இடையே சேர்மன் பதவியை பிடிக்க கடும்போட்டி ஏற்பட்டது. இதில் சேர்மன் பதவிக்கான வேட்பாளராக கட்சி தலைமை ஆண்டாளை அறிவித்த போதிலும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஆதரவுடன் காந்திமதி கண்ணன் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார்.முன்னாள் அமைச்சர் பொன்முடியின் ஆதரவு இருந்ததாலும், ஒன்றிய சேர்மன் பதவி தனது தாயாரிடமும், ஒன்றிய செயலாளர் பதவி தன்னிடமும் இருந்ததால் வசந்தம் கார்த்திகேயன் தியாகதுருகம் ஒன்றியத்தில் பெரும் வளர்ச்சியடைந்தார். இவரின் முயற்சியால் மாற்று கட்சியை சேர்ந்த பலர் தி.மு.க.,வில் இணைந்தனர். வரும் உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் சேர்மன் பதவியை தி.மு.க., கைப்பற்ற வசந்தம் கார்த்திகேயன் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.தற்போது வடதொரசலூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தனது மனைவி இளமதியை வேட்பாளராக்கியுள்ளார். அதேபோல் தற்போதய சேர்மனாக உள்ள அவரது தாய் காந்திமதிகண்ணன் தேர்தலில் போட்டியிடவில்லை. தியாகதுருகம் ஒன்றிய சேர்மன் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் வசந்தம் கார்த்திகேயனின் மனைவி இளமதியை அப்பதவியில் அமர்த்தும் திட்டத்துடன் அவரை வேட்பாளராக களம் இறக்கியுள்ளார்.இவரது சொந்தஊரான சாத்தனூர் கிராமத்தை உள்ளடக்கிய எஸ். ஒகையூர் பகுதியை தவிர்த்துவிட்டு இத்தேர்தலில் வடதொரசலூரில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளதால் இப்பகுதியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அ.தி.மு.க., வை பொறுத்தவரை ஒன்றிய செயலாளர் வைத்தியலிங்கம் தனது மனைவி பச்சையம்மாளை சேர்மனாக்கும் முடிவுடன் எஸ். ஒகையூரில் அவரை வேட்பாளராக களம் இறக்கியுள்ளார். அதேபோல் முன்னாள் சேர்மன் அய்யப்பாவும் தனது மனைவி தைலம்மாளை பல்லகச்சேரியில் வேட்பாளராக போட்டியிட வைத்துள்ளார். இருவரும் வெற்றிபெறும் பட்சத்தில் கட்சி தலைமை யாரை ஒன்றிய சேர்மன் வேட்பாளராக அறிவிக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒன்றியத்தில் உள்ள 16 வார்டுகளிலும் அ.தி.மு.க.,- தி.மு.க., கட்சிகள் நேரடியான பலபரீட்சையில் இறங்கியுள்ளதால் உள்ளாட்சி தேர்தல் பரபரப்பாக உள்ளது. அதேபோல் இரு கட்சியினரும் பணத்தை கணக்கு பார்க்காமல் தொண்டர்களுக்கு 'சப்ளை' செய்து தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இது தே.மு.தி.க., வினரை கலக்கமடைய வைத்துள்ளது. தேர்தலை சந்திக்க இக்கட்சியில் இளைஞர்கள் முனைப்புடன் இருந்தாலும் அவர்களுக்கு போதிய செலவு செய்ய இக்கட்சி வேட்பாளர்கள் கணக்கு பார்ப்பதால் பின்னடைவை ஏற்படுத்தும் நிலை உள்ளது. மற்ற கட்சியினர் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே களம் இறங்கியுள்ளதை அவர்களின் செயல்பாடுகள் தெளிவாக வெளிப்படுத்துகிறது. தியாகதுருகம் ஒன்றிய சேர்மன் பதவியை பிடிக்க அ.தி.மு.க.,- தி.மு.க., கட்சியினரிடையே பலத்த போட்டி எழுந்துள்ளதால் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இப்பகுதியில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us