
சமச்சீரில் சேருங்கள்! ஆர்.நடராஜன், திண்டுக்கலிலிருந்து எழுதுகிறார்: மத்திய அமைச்சர் கமல்நாத் இன்னும் ஐந்து ஆண்டுகள் பதவியில் நீடித்தால், உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவராவது உறுதி. அமைச்சர் சிதம்பரம், தன்னை இன்னும் சைக்கிள் ஓட்டுவது போல் காண்பித்துக் கொண்டாலும், பல கோடிகளுக்கு உரிமையாளர். அமைச்சர் சரத்பவாருக்கோ, கிரிக்கெட் வழியாகக் கொட்டும் வருமானம் எக்கச்சக்கம். இச்சூழ்நிலையில், 50 ஆண்டுகளுக்கு முன், பெருமையுடன் வாழ்ந்த இந்திய அரசியல் தலைவர்களையும், நாம் அவசியம் நினைவில் கொள்ள வேண்டும். ஆஸ்தியைப் பற்றியே சிந்திக்காமல், எந்நேரமும் மக்கள் நலனையே எண்ணி, அவர்களுக்காகவே வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, சி.சுப்பிரமணியம், பக்தவத்சலம், எளிமையான கக்கன், முன்னாள் ஜனாதிபதி ஆர்.வி.சஞ்சீவரெட்டி, மாமனிதர்கள் லால்பகதூர் சாஸ்திரி, குல்சாரிலால் நந்தா, மொரார்ஜி தேசாய், மிகுந்த அடக்கத்துடன் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் வாஜ்பாய் போன்றவர்களின் வாழ்க்கையும், செயல்பாடுகளும், தமிழகப் புது சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களில் அவசியம் இடம்பெற வேண்டும். அப்போது தான் இன்றைய இளையதலைமுறை, எப்படிப்பட்ட அரசியல் தலைவர்களை நாடு வழிகாட்டியுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு, அவர்களை இன்றைய அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டு, உண்மை நிலையை உணரலாம். தாங்களும், வருங்காலத்தில் சிறந்த இந்திய பிரஜைகளாக உருவாவதற்கு, உயர்ந்த வழியாகவும் அமையும். அதற்கான ஏற்பாடுகளை புதிய பாடத்திட்டத்தில் ஏற்படுத்த, தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.
லாரி ஓட்டுனருக்கு யோசனை! வீ.சுந்தரமகாலிங்கம், திருவனந்தபுரத்திலிருந்து எழுதுகிறார்: 'லாரி டிரைவருக்கு பெண் தருவதில்லை' என்று, நாமக்கலிலிருந்து ஒரு வாசகர், இப்பகுதியில் எழுதியிருந்தார். 'டீசல் உபயோகத்தால், ஆண்மைக் குறைவும், செம்மண் லோடுகளால் இதய நோயும் ஏற்படுவதால் பெண் தருவதில்லை' என்றும் குறைபட்டிருக்கிறார். அத்துடன் முக்கியமான காரணம், டிரைவர்களுக்கு பெரும்பாலும், 'எய்ட்ஸ்' நோய் இருப்பதாலும் தான் என்ற உண்மை யை, அவர் மறைத்து விட்டார். நாமக்கல், சேலம் பகுதிகளில் உள்ள லாரி டிரைவர்களுக்கு, இந்நோய் பரவலாக இருப்பதை புள்ளி விவரங்களும், செய்திகளும் எடுத்துக் காட்டுகின்றன. பெண் கேட்கப் போகும்போது, 'எய்ட்ஸ்' நோய்க்கான சர்டிபிகேட் யாரும் கேட்பதில்லை. மணமகன் வீட்டார் வரதட்சணை கேட்பதுபோல், பெண் வீட்டார் இதைக் கேட்பதும் அவசியம். மும்பை, ஐதராபாத், கோல்கட்டா, டில்லி என, வெகுதூரம் லாரிகள் சென்று திரும்பி வர ஒரு மாதம் ஆகலாம். இடையே, லாரி டிரைவர்கள் தங்கள் இயற்கை உந்துதலை தீர்த்துக் கொள்ள, வேறு பெண்களை நாடிச் செல்வதால், 'எய்ட்ஸ்' நோய் தொற்றிக் கொள்கிறது. இவர்களை திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கும் பரவுகிறது. இதுதான் நடப்பில் இருக்கிறது. இதனாலேயே பெண் கொடுக்கத் தயங்குகின்றனர். இதைத் தடுக்க அரசு என்ன செய்ய முடியும்? டிரைவர்கள் கட்டுப்பாடாக இருந்து, தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். டீசல் திருட்டு, குறைவான சம்பளம், இவற்றைத் தவிர்க்க, அரசு எதுவும் செய்ய இயலாது. நாடு முழுவதும் டோல்கேட் வரி உயர்வு, டீசல் விலை உயர்வை குறைக்க, லாரி ஸ்டிரைக் நடத்தும் உரிமையாளர்கள், டிரைவர்களின் குறைகளைத் தீர்க்கவும் முயற்சி செய்ய வேண்டும். லாரி டிரைவர்கள் பலரும், ஓவர் லோடுடன், ஓவர் ஸ்பீட் போவதும் விபத்துகளுக்குக் காரணம். அத்துடன் போதை வேறு. தூக்கம் வந்தால், உடனே வாகனத்தை நிறுத்தி, ஓய்வெடுக்கத் தவறுவதும் காரணம். இவற்றையும் லாரி டிரைவர்கள் தடுத்தால், விபத்துகளை தடுக்கலாம். லாரி ஸ்டிரைக்கின்போது, விபத்துகள் குறைவாக இருப்பதை நாம் பார்த்தோம். முக்கியமாக டிரைவர்கள், தங்கள் குடும்ப புகைப்படத்தை, இருக்கை முன் பார்வையில் படும்படி வைத்துக் கொள்வது நல்லது.
திருந்த வேண்டும் தனி மனிதன்! நா.மு.நாச்சியப்பன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: பரமக்குடி கலவரம், துப்பாக்கிச் சூடு வருத்தத்தை அளிக்கிறது. நாம் எல்லா வகையிலும் முன்னேறி என்ன பயன்? ஒற்றுமை என்ற அடிப்படை அறிவில், கொஞ்சம் கூட முன்னேறவில்லையே! 'ஜாதிகள் இல்லையடிப் பாப்பா...' என, சமுதாயத்திற்கு உரைத்த, மகாகவி பாரதியின் நினைவு நாளிலேயே, ஜாதிக்கலவர துப்பாக்கிச் சூடா? இது ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய பிரச்னை. அரசியல் கட்சிகள் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும்; பின், ஒதுங்கிவிடும். கொலையாவது அப்பாவிகள் தான். நம் சமுதாயத்தில், ஜாதிக் கொடுமை தான் பெருங்கொடுமையாக உள்ளது. 'இவர் வருவார், அவர் வருவார்' என காத்திராமல், ஒவ்வொரு ஊரும், ஒவ்வொரு மனிதரும் உள்ளம் மலர்ந்து, விட்டுக்கொடுத்து, உறவு கொள்ள வேண்டும். தனிமனிதன் திருத்த வேண்டும்.


