Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தென்னையில் கேரள வாடல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை

தென்னையில் கேரள வாடல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை

தென்னையில் கேரள வாடல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை

தென்னையில் கேரள வாடல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை

ADDED : செப் 08, 2011 10:07 PM


Google News
உடுமலை : உடுமலை பகுதியில், தென்னை மரங்களை தாக்கும் கேரள வாடல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் தொழில்நுட்ப ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர். உடுமலை அருகே மூங்கில்தொழுவு பகுதியில், தென்னை மரங்களில் கேரள வாடல் நோய் பரவியுள்ளது குறித்து ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பெதப்பம்பட்டி வட்டார வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் 3.52 எக்டர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கேரள வாடல் நோய் 1882 ல் கேரள கோட்டயத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்டது. இந்நோய் அனைத்து தென்னை ரகங்களிலும், எல்லா மண் வகைகளிலும் காணப்படுகிறது. இளங்கன்றுகள் முதல் முதிர்ந்த மரங்கள் வரை இந்நோயால் பாதிக்கப்படுகின்றன. நோய் முற்றிய நிலையில் 80 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும். 'பைட்டோ பிளாஸ்மா' எனப்படும் நோய் கிருமியால் நோய் ஏற்படுகிறது. இக்கிருமி உருண்டை, செங்கோல், உருளை மற்றும் சுருள் போன்ற பல வித வடிவங்களை கொண்டது. நோய் காரணி தத்துப்பூச்சி மற்றும் கண்ணாடி இறக்கை பூச்சியின் மூலம் பரவுகிறது. அறிகுறிகள்: இலைமட்டைகள் கீழ் நோக்கி வளைந்து மனிதனின் விலா எலும்பு போல காணப்படும். மரத்தின் நடுப்பகுதியில் உள்ள இலைகள் மஞ்சள் நிறமாக காணப்படும். இலை ஓரங்கள், பூங்கொத்து கருகியும், குருத்து அழுகியும் காணப்படும். வேர் அழுகி நிறம் குறைந்திருக்கும். தென்னங்கன்றுகளில் நோய் ஏற்பட்டால் பூக்கும் தருணம் தள்ளி போய் காய் மகசூல் குறையும். மேலாண்மை முறைகள்: நோய் தாக்கிய மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதால், மற்ற மரங்களுக்கு நோய் பரவுவதல் தடுக்கப்படுகிறது. நோய் தாங்கும் திறன் கொண்ட ரகங்களான சவுகாட் ஆரஞ்ச் குட்டை, சவுகாட் பச்சை குட்டை மற்றும் வீரிய ஒட்டு ரகமான சவுகாட் ஆரஞ்ச் குட்டை*மேற்கு கடற்கரை நெட்டை பயன்படுத்தலாம். உரமேலாண்மை:(ஒரு மரத்திற்கு ஒரு ஆண்டுக்கு) தொழு உரம்-50 கிலோ, வேப்பம்புண்ணாக்கு- 5 கிலோ, சூடோமோனாஸ்-200 கிராம், யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட்-2 கிலோ, பொட்டாஷ்-3.5 கிலோ, மக்னீசியம் சல்பேட் 1 கிலோ, நுண்ணூட்டம் 1 கிலோ (மணலுடன் கலந்து), போரேட் 20 கிராம் குருணை மருந்தை 200 கிராம் மணலுடன் கலந்து குருத்தின் அடிப்பகுதியில் இட வேண்டும். கோடையில் ஒரு வாரத்திற்கு தண்ணீர் 250 லிட்டர் வீதம் மரம் ஒன்றுக்கு பாய்ச்ச வேண்டும். வடிகால் வசதி நன்றாக செய்ய வேண்டும். ஆண்டுக்கு 10 காய்களுக்கும் குறைவாக காய்க்கும் நோயுற்ற மரங்களை அப்புறப்படுத்தி தரமான தென்னங்கன்றை நட வேண்டும். வாழை ஊடுபயிராக பயிரிடுவதால் அதன் வேரிலிருந்து வெளியேறும் சாறு நோய் கிருமி வளர்வதை தடுக்கிறது. ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளின் மூலம் தென்னையை தாக்கும் பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு பெதப்பம்பட்டி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் அணுகலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us