ADDED : அக் 08, 2011 11:08 PM
பந்தலூர் : பந்தலூர் பகுதியில் தனியார் ஜீப்களில் உயிரை பணயம் வைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் பந்தலூர் தாலுகா அமைந்துள்ளது.
இப்பகுதிக்கு 52 பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது மிகவும் குறைந்தளவு பஸ்களே இயக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் இயக்கப்படும் பஸ்கள் ஒரு சில வழி தடங்களில் திடீரென நிறுத்துவதால் காலை நேரத்தில் வரும் பயணிகள் பஸ் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். இதனால் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் டாக்சி ஜீப்களை மக்கள் நாடுகின்றனர்.பஸ்சில் பெறப்படும் கட்டணங்களை விட பல மடங்கு அதிக கட்டணம் தனியார் வாகனங்களில் வசூலிப்பதுடன், உயிரை பணயம் வைக்கும் வகையில் ஜீப்களின் உள்பகுதியில் 12 பேரும் வெளிபாகங்களில் 10 பேரும் பயணிக்கின்றனர். எனவே, பந்தலூர் பகுதிக்கு போதுமான பஸ் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராமனிடம் கேட்டபோது, 'போதுமான பஸ் வசதி இல்லாத நிலையில் இதுபோன்ற பயணம் தவிர்க்க இயலாது. எனினும், தேவாலா டி.எஸ்.பி.,யிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.


