ஹசாரே வீடியோ பிரசாரத்தால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படாது : அரியானா காங்., தலைவர்
ஹசாரே வீடியோ பிரசாரத்தால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படாது : அரியானா காங்., தலைவர்
ஹசாரே வீடியோ பிரசாரத்தால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படாது : அரியானா காங்., தலைவர்
UPDATED : அக் 09, 2011 12:42 AM
ADDED : அக் 08, 2011 11:00 PM

ஹிசார்: ''அன்னா ஹசாரேயின் எதிர்ப்பு பிரசாரத்தால், இடைத்தேர்தலில் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது,'' என, அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் பூல் சந்த் முல்லானா கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது: ஹிசார் லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. ஜன்லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்றாததால், இந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து பிரசாரம் செய்யப் போவதாக, அன்னா ஹசாரேயும், அவரது குழுவினரும் அறிவித்துள்ளனர். அவர்களின் காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரம், எங்களின் தேர்தல் வெற்றிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தங்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்பது, அரியானா மக்களுக்கு நன்றாக தெரியும். அரியானா காங்கிரஸ் அரசும், மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளன. எனவே, ஹசாரே குழுவினர் கூறுவதை, மக்கள் புறக்கணித்து விடுவர். ஹசாரேக்கு பின்னால், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு உள்ளது என்பது, அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இவ்வாறு பூல் சந்த் முல்லானா கூறினார். இதற்கிடையே, ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா, நவீன் ஜெய்ஹிந்த் ஆகியோர், அரியானாவில், நேற்று, திட்டமிட்டபடி பிரசாரம் மேற்கொண்டனர். தங்களின் பிரசாரத்தின்போது, காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என, மக்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
சமரசம்? : இதற்கிடையில், காந்தியவாதி அன்னா ஹசாரேயை, அவரது சொந்த ஊரான ராலேகான் சித்தியில், மகாராஷ்டிரா மாநில காங்., தலைவர் மாணிக் ராவ் தாகூர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, 20 நிமிடம் நடந்தது. இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள் கூறுகையில்,' காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டாம் என, ஹசாரேயை சமாதானப்படுத்துவதற்காகவே, மாணிக்ராவ் தாகூர், அவரை சந்தித்து பேசியுள்ளார்' என்றன.


