ஐகோர்ட் தடை உத்தரவை மீறி கோவையில் செயல்படும் இசைவு தீர்ப்பாயம்
ஐகோர்ட் தடை உத்தரவை மீறி கோவையில் செயல்படும் இசைவு தீர்ப்பாயம்
ஐகோர்ட் தடை உத்தரவை மீறி கோவையில் செயல்படும் இசைவு தீர்ப்பாயம்
ADDED : செப் 07, 2011 11:16 PM
கோவை: தமிழகம் முழுவதும் இசைவுத் தீர்ப்பாயங்கள் செயல்பட, சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தும், கோவையில் சில இசைவுத் தீர்ப்பாயங்கள், தொடர்ந்து தீர்ப்புகளைக் கூறும், 'திடுக்' புகார் ஐகோர்ட்டுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு பிரச்னைகளை விசாரித்து, நியாயமான தீர்ப்பு வழங்க, இசைவு தீர்ப்பாயங்கள் அமைக்கப்படுகின்றன. தீர்ப்பாயத்தின் நடுவராக, அங்கீகாரம் பெற்ற, இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய, சீனியர் வழக்கறிஞர் நியமிக்கப்படுகிறார். பிரச்னையை நியாய அடிப்படையில் விசாரித்து, இருதரப்பும் ஏற்றுக் கொள்ளக் கூடிய, யாருக்கும் பாதிப்பில்லாத தீர்ப்பு வழங்க வேண்டியது, இசைவுத் தீர்ப்பாளரின் கடமை. ஆனால், சில இசைவுத் தீர்ப்பாய நடுவர்கள், பணம் சம்பாதிக்க வேண்டும்,சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், சட்ட விரோத இசைவு தீர்ப்பாயங்களைத் துவக்கி, ஒருதலைபட்ச தீர்ப்பு அளிக்கின்றனர். இத்தீர்ப்புக்கு, மேல்முறையீடு இல்லை. இதுவே இறுதி தீர்ப்பு எனக் கருதி, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுபற்றி, 2010, செப்., 5, தினமலர் நாளிதழில், செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, சாயிபாபா காலனியில், இசைவுத் தீர்ப்பாயம் நடத்தி வந்த வடநாட்டு ஆசாமி கைது செய்யப்பட்டார். கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டபோது, இவரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டார். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இதுபற்றி, கோவை, சுந்தராபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கலையரசன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'கோவை மற்றும் திருப்பூரில், 'சமரச தீர்ப்பாயம்' என்ற பெயரில் போலி கோர்ட்டுகள் செயல்படுகின்றன. அவற்றை நடத்துவோர், தங்களை நீதிபதிகளாக பாவித்து, காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தி வலம் வருகின்றனர். விசாரிக்க அதிகாரமில்லாத வழக்குகளையும் விசாரித்து தீர்ப்புக் கூறி பணம் சம்பாதிக்கின்றனர். பொதுமக்களை பாதிக்கும் இதுபோன்ற போலி கோர்ட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என, தெரிவித்திருந்தார். சென்னை ஐகோர்ட், 'பெஞ்ச் நீதிமன்றத்துக்கு இணையாக போலி கோர்ட்டுகள் நடத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. சமரச தீர்ப்பாயம் நடத்துவோர் தங்களை நீதிபதி என அழைப்பதையும், சிவப்பு சுழல் விளக்குடன் காரில் வலம் வருவதும் மோசடி செயல். போலி நீதிபதிகள், கோர்ட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டது. கோவை வழக்கறிஞர்கள் சங்கமும்,' போலி தீர்ப்பாயங்கள் பற்றியும், அத்தீர்ப்பாய தீர்ப்புகளால் ஏற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டது. இச்சூழலில், கடந்த மார்ச் 7 அன்று சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பில், தமிழகம் முழுதுவம் உள்ள இசைவுத் தீர்ப்பாயங்கள் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த 9ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவிடப்பட்டது. இதனால், கோவையில் செயல்பட்ட போலி இசைவுத் தீர்ப்பாயங்கள், அங்கீகாரம் பெற்ற தீர்ப்பாயங்களின் செயல்பாடு முடங்கியது. இதையும் மீறி, கோவை வழக்கறிஞர்களுக்கு தெரியாமல் தடாகம் ரோட்டில் இசைவுத் தீர்ப்பாயம் ஒன்று செயல்படுவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு சட்ட விரோதமாக பல வழக்குகளுக்கு தீர்ப்பு கூறப்பட்டுள்ள அதிர்ச்சி தகவலும் தெரிய வந்துள்ளது. இதுபற்றி சென்னை ஐகோர்ட்டுக்கு, வழக்கறிஞர் கலையரசன் உட்பட பலர் புகார் (தீர்ப்பு நகலுடன்) அனுப்பி, நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


