ADDED : அக் 08, 2011 01:29 AM
சேலம்: சேலம் மாநகர போலீஸார், மாஜி அமைச்சரின் உதவியாளர் கௌசிக பூபதியின் மீது வழக்கு மேல் வழக்கை பதிவு செய்த போதிலும், கைது நடவடிக்கையில் மட்டும் இறங்காமல் ஒதுங்கி இருந்தனர். இந்நிலையில், தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள ஐந்தாவது வழக்கில், அவரை கைது செய்து, தங்களது விசுவாசத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.சேலம், அங்கம்மாள் காலனி நில விவகாரம், பிரீமியர் ரோலர் மில் அபகரிப்பு வழக்குகளில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கௌசிக பூபதி மீது, எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து, தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலமோகன்ராஜ் என்பவரின் நிலத்தை மிரட்டி வாங்கியதாக, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.கடந்த ஜூலை16ல், இவர் மீது இரண்டு நில அபகரிப்பு வழக்குகளில், தலா எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவும், ஜூலை 30ல் பாலமோகன்ராஜ் புகாரின் பேரில் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி, இவர், ஆக.,18ல் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸில் சரணடைந்திருக்க வேண்டும்.
ஆனால், அன்று சரணடையவில்லை.
சரணடையாத நிலையிலும், அவர் மீது வழக்குகள் மட்டும் பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், கடந்த செப்டம்பர் 5ல், கோயமுத்தூர் ஜூவல்லர்ஸ் உரிமையாளர்கள் கோபிநாத், ஸ்ரீநாத் ஆகியோர் அளித்த புகாரின் பேரில், கௌசிக பூபதி மீது, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.சேலம் மாநகர போலீஸ் சார்பில் மட்டும் கௌசிக பூபதி மீது, இதுவரை நான்கு வழக்குகள் பதிவு செய்த போதிலும், அவரை கைது செய்யவில்லை. இந்நிலையில், கடந்த மாதம், சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 5ல், நீதிபதி சரத்ராஜ் முன் சரணடைந்தார்.
அதையடுத்து, அவரை சென்னையில் தங்கியிருந்து, தினம்தோறும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, அவர் சென்னையில் முகாமிட்டிருந்தார்.இந்நிலையில், அரியானூரை சேர்ந்த பழனிசாமி என்பவர், சேலம் அக்ரோ கூட்டுறவு சேவா சங்கத்தின் நிலத்தை மோசடி செய்து விற்ற பிரச்னையில், கௌசிக பூபதி மீது புகார் தெரிவித்தார். இந்த புகாரை அடுத்து, கௌசிக பூபதி மீது ஐந்தாவது வழக்காக, 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னையில் முகாமிட்டிருந்த கௌசிக பூபதியை, கூடுதல் துணை கமிஷனர் ராஜராஜன் தலைமையில் சென்ற தனிப்படையினர், நேற்று கைது செய்தனர். இதன் மூலம் மாநகர போலீசுக்கு ஏற்பட்ட கலங்கத்தை துடைத்துக் கொண்டதாக, போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தாலும், மாஜியின் மகன் ராஜாவை கைது செய்வதில், கோட்டை விட்டு, தங்களுடைய விசுவாசத்தை புதுப்பித்து வருகின்றனர்.


