Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பஸ்கள் மோதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு: திருச்சி அருகே சாலை மறியல்

பஸ்கள் மோதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு: திருச்சி அருகே சாலை மறியல்

பஸ்கள் மோதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு: திருச்சி அருகே சாலை மறியல்

பஸ்கள் மோதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு: திருச்சி அருகே சாலை மறியல்

ADDED : செப் 06, 2011 10:32 PM


Google News

துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே, ஆம்னிபஸ் - அரசு பஸ் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், நேற்று ஒரு பெண் பலியானதையடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை, 15 ஆக உயர்ந்தது.



திருச்சி - மதுரை பை-பாஸ் ரோட்டில், துவரங்குறிச்சி அருகே உள்ள லஞ்சமேடு கைகாட்டி என்ற இடத்தில், நேற்று முன்தினம், மதியம் 1.30 மணியளவில் ஆம்னி பஸ்சும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில், மூன்று குழந்தைகள், எட்டுப் பெண்கள், மூன்று ஆண்கள் என, 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; படுகாயமடைந்த 35 பேர், மணப்பாறை, திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று முன்தினமே, அனைத்து உடல்களும் அடையாளம் காணப்பட்டு, இரவு 12 மணிக்குள், பிரேத பரிசோதனை முடித்து, அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆம்னி பஸ் டிரைவர் உடல் மட்டும், நேற்று காலை, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, தொட்டியப்பட்டியைச் சேர்ந்த நாகலட்சுமி,35, நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை, 15 ஆக உயர்ந்தது.



* உடல் மாறியதால் சாலை மறியல்: விபத்தில், அகரப்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மனைவி அமராவதி,30, ஆரியகோன்பட்டியைச் சேர்ந்த கந்தன் மனைவி சூரியகாந்தி,30, ஆகியோரும் இறந்தனர். பிரேத பரிசோதனை முடிந்ததும், அமராவதி உடலை, கந்தனிடம் போலீசார் ஒப்படைத்தனர். அதன்பிறகு, மனைவி உடலைப் பெற வந்த வெள்ளைச்சாமி, சூரியகாந்தி உடலைப் பார்த்து, 'இது என் மனைவி உடல் கிடையாது' எனக் கூறியதால், குழப்பமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதன் பின்னரே, கந்தனிடம் ஒப்படைத்தது, வெள்ளைச்சாமி மனைவி அமராவதி உடல் என்று தெரியவந்தது. ஆரியக்கோன்பட்டி சென்று, அங்கு இறுதிச் சடங்கு செய்ய வைத்திருந்த அமராவதி உடலை கைப்பற்றிய போலீசார், மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். இப்பிரச்னை முடிய, இரவு 11 மணிக்கு மேலாகி விட்டதால், சூரியகாந்தி உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்து, மணப்பாறை - புதுக்கோட்டை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு, ஆர்.டி.ஓ., (பொறுப்பு) சம்பத், டி.எஸ்.பி., தொல்காப்பியன் ஆகியோர் வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டு, இரவு 12 மணிக்கு சூரியகாந்தியின் உடல் பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசாரின் கவனக் குறைவே, திடீர் சாலை மறியலுக்குக் காரணமாக அமைந்து விட்டது.



* விபத்தில் இறந்த எட்டுப் பெண்களின் நகைகள், ஆம்புலன்சில் ஏற்றும் போது இருந்த நிலையில், அதன் பிறகு காணாமல் போயுள்ளது. இவ்வாறாக, இறந்த பெண்களிடமிருந்து, 15 சவரன் நகை திருட்டு போயுள்ளதாக, உறவினர்கள் தெரிவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us