Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/பட்டா நிலங்களில் மரம் வளர்ப்பு ஒரு லட்சம் கன்றுகள் ஒதுக்கீடு

பட்டா நிலங்களில் மரம் வளர்ப்பு ஒரு லட்சம் கன்றுகள் ஒதுக்கீடு

பட்டா நிலங்களில் மரம் வளர்ப்பு ஒரு லட்சம் கன்றுகள் ஒதுக்கீடு

பட்டா நிலங்களில் மரம் வளர்ப்பு ஒரு லட்சம் கன்றுகள் ஒதுக்கீடு

ADDED : ஆக 02, 2011 01:04 AM


Google News
சேலம் : சொந்தமாக பட்டா நிலம் வைத்துள்ளோருக்கு, தேக்கு மற்றும் சில்வர் ஓக் மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, சேலம் அஸ்தம்பட்டி வன அலுவலகத்தில் தேக்கு மரக்கன்றுகள் ஏராளமாக வைக்கப்பட்டுள்ளன. பட்டா நிலத்தில் மரங்களை வளர்க்கும் திட்டத்தை, அரசு அமல்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில், பட்டா நிலத்தில் மரங்களை வளர்க்க, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சில்வர் ஓக், தேக்கு ஆகிய இரண்டு மரங்களின் கன்றுகள், பட்டா நிலம் வைத்துள்ளோருக்கு வழங்கப்படும். சில்வர் ஓக் மரங்கள், ஐந்தாண்டுகளில் பலன் தரக்கூடியது. தேக்கு மரங்கள், 20 ஆண்டுக்கு பிறகு நல்ல பலன் தரக்கூடியவை.

சேலம் மாவட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோயில்பிள்ளை கூறியதாவது: ஏற்காடு வனச்சரகம், சேர்வராயன் தெற்கு சரகம், வடக்கு சரகம், டேனிஸ்பேட்டை சரகம் மற்றும் மேட்டூர் வனச்சரகத்தில் உள்ள நர்சரிகளில் வைத்து தேக்கு, சில்வர் ஓக் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இரண்டடி உயரம் வளர்ந்தவுடன் அவை பட்டா நிலம் உள்ளவர்களுக்கு வழங்கப்படும். சொந்தமாக நிலம் வைத்திருப்போர் சிட்டா அடங்கலை வனத்துறையினரிடம் காண்பித்தால், அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படும். இதற்கு கட்டணம் இல்லை.

ஒரு ஏக்கருக்கு, 200 மரக்கன்றுகள் வழங்கப்படும். ஒரு நபருக்கு அதிகபட்சமாக, 500 மரக்கன்றுகள் வழங்கப்படும். மரக்கன்றுகளை உரிய முறையில் பாதுகாப்புடன் வளர்த்து வர வேண்டும். ஏற்காடு மலைப்பகுதியில் பட்டா நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு, சில்வர் ஓக் மரக்கன்றுகள் வழங்கப்படும். இந்த வகை மரங்கள் கடல் மட்டத்தில் இருந்து, 1,000 அடி உயரத்துக்கு மேல்தான் வளரும் தன்மை கொண்டவை. மற்ற இடங்களுக்கு தேக்கு மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. தற்போது மழைக்காலம் துவங்கி விட்டதால், இந்த மாத இறுதிக்குள் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டுவிடும்.

ஆறு மாதத்துக்கு ஒரு முறை வனத்துறையினர் மரம் வளர்க்கும் இடத்தை தணிக்கை செய்ய வருவர். மரங்களை சரியான முறையில் வளர்த்திருந்தால், அதற்கான பராமரிப்பு செலவையும் வனத்துறையே ஏற்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us