பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு ஆமதாபாத்? எச்சரிக்கிறார் சிதம்பரம்
பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு ஆமதாபாத்? எச்சரிக்கிறார் சிதம்பரம்
பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு ஆமதாபாத்? எச்சரிக்கிறார் சிதம்பரம்

டில்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: எல்லையைத் தாண்டி செயல்படும் அமைப்புகளுக்கு, ஐகோர்ட் குண்டு வெடிப்பில் தொடர்பில்லை எனக் கூற முடியாது. தற்போதைய நிலையில், ஒவ்வொரு அமைப்பையும் நாங்கள் சந்தேகிக்கிறோம். உறுதியான ஆதாரங்கள் கிடைக்கும் வரை எதையும் சொல்ல மாட்டோம். ஐகோர்ட் குண்டு வெடிப்பு தொடர்பாக, காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இருந்து முதலில் ஒரு இ-மெயில் வந்தது. அதனால், அங்கு ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அது குறித்த அறிக்கை வந்து சேரும். காஷ்மீரில் இருந்து வந்த இ-மெயிலை தொடர்ந்து, மேலும் இரண்டு இ-மெயில்களும் வந்துள்ளன. மூன்றாவதாக இன்று (நேற்று) வந்த இ-மெயில் குறைபாடுடையதாக உள்ளது. அதில், உள்ள குறியீடுகள் எளிதில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அந்த இ-மெயிலில், அடுத்த தாக்குதல் ஆமதாபாத்தில் நடக்கலாம் என, சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-மெயிலில் பயன்படுத்திய குறியீடுகளைப் பார்க்கும் போது, அதை பயங்கரவாதிகள் யாரும் அனுப்பி இருக்கலாம் என, உறுதியாகச் சொல்ல முடியாது. இருந்தாலும், இந்த விஷயத்திலும் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். குஜராத் மாநில அரசை உஷார்படுத்தியுள்ளோம். இதுதவிர, வேறு பல மாநில அரசுகளுக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். பொதுமக்கள் அதிகம் கூடும் நிறுவனங்கள் மற்றும் இடங்களில் தக்க சோதனை நடவடிக்கைகளை கையாளும்படி தெரிவித்துள்ளோம். டில்லி குண்டு வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட தடயவியல் அறிக்கையில், நைட்ரேட் சார்ந்த வெடி மருந்துகளும், வேறு சில வெடி மருந்துகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த வகையான குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வரலாம். குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் பெரிய அளவில் திருப்பம் ஏற்படவில்லை என்றாலும், நம்பகமான துப்புகள் கிடைத்துள்ளன. ஆனால், அவையே உறுதியான துப்புகளாக இருக்க வாய்ப்பு இல்லை. அதில், மாற்றங்கள் ஏற்படலாம். நாட்டில் போலீஸ் படையைப் பலப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஒரு லட்சம் துணை ராணுவப் படையினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநில போலீஸ் படைகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.


