Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாஜி மந்திரியின் உத்தரவால் ஓய்வு நாளில் சஸ்பெண்ட்: முன்னாள் கலெக்டர் மீது புகார்

மாஜி மந்திரியின் உத்தரவால் ஓய்வு நாளில் சஸ்பெண்ட்: முன்னாள் கலெக்டர் மீது புகார்

மாஜி மந்திரியின் உத்தரவால் ஓய்வு நாளில் சஸ்பெண்ட்: முன்னாள் கலெக்டர் மீது புகார்

மாஜி மந்திரியின் உத்தரவால் ஓய்வு நாளில் சஸ்பெண்ட்: முன்னாள் கலெக்டர் மீது புகார்

ADDED : செப் 06, 2011 01:26 AM


Google News
சேலம் : கடந்த தி.மு.க., ஆட்சியில், மாஜி மந்திரி வீரபாண்டி ஆறுமுகம் தூண்டுதலின்பேரில், பொய்யான குற்றச்சாட்டை கூறி, ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்ததாக, ஓய்வு பெற்ற துணை தாசில்தார் குடும்பத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

சேலம் கலெக்டர் அலுவலகம் முன், உண்ணாவிரதம் மேற்கொண்ட ஓய்வு பெற்ற துணை தாசில்தார் அனந்தலட்சுமி, அவரது குடும்பத்தினர், ராசகோபால் மற்றும் குடும்பத்தினர் மனுவில் கூறியிருப்பதாவது: ஆத்தூர் தாசில்தார் அலுவலகத்தில், துணை தாசில்தராக பணியாற்றினேன். 2006ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில், சேலம் மாநகராட்சி 12வது வார்டில் ரேகா பிரியதர்ஷினி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். அப்போது, என் கணவரின் முதல் மனைவி கவுரி சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். அப்போது, சேலம் தாசில்தாராக பணியாற்றிய ரங்கநாதன், 'ரேகா பிரியதர்ஷினி வெற்றி பெற்றால், அவர்தான் மேயர்; அதனால், கவுரியை வாபஸ் வாங்கும்படி வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார் என்று கூறினார். கவுரி வாபஸ் வாங்காவிட்டால், பிரச்னைகளை சந்திக்க நேரிடும்' என்றும் மிரட்டினார். அப்போதைய மந்திரி வீரபாண்டி ஆறுமுகம் தூண்டுதலின்பேரில், கவுரியின் ஜாதி சான்றிதழை காரணம் காட்டி, உதவி தேர்தல் அதிகாரி துரைசாமி, வேட்பு மனுவை நிராகரித்தார். ரேகா பிரியதர்ஷினி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி, சேலம் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் கவுரி வழக்கு தொடர்ந்தார். அருந்ததியரான ரேகா பிரியதர்ஷினி, ஆதிதிராவிடர் என பொய் சொல்லி வேட்பு மனுத்தாக்கல் செய்ததை ஏற்றுக் கொண்டு, அவர் தி.மு.க., வேட்பாளர் என்பதால், தேர்தலில் போட்டியிட அனுமதி அளித்தனர், எனக் கூறினோம். ஆனால், அவரை பதவி நீக்கம் செய்யவில்லை. இன்றளவும் மேயராக பதவி வகித்து வருகிறார். அதிகாரிகளும், சட்டவிரோதமாக மேயருக்கு துணை போய் கொண்டிருக்கின்றனர். இவற்றை மனதில் கொண்டு, என்னைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக, ரவிச்சந்திரன் என்பவர் பெயரில் தவறுதலாக பட்டா மாறுதல் செய்து உத்தரவிட்டேன், என, 2007 ஜூன் 29ம் தேதி பொய் குற்றச்சாட்டை ஏற்படுத்தி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உத்தரவின்பேரில், ஓய்வு பெறும் நாளான, 30ம் தேதி, அப்போதைய கலெக்டர் சந்திரகுமார், சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். எனக்கு ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைக்காத வகையில் செய்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, ஓய்வூதிய பலன்களை நிறைவேற்ற கலெக்டருக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இழுத்தடிப்பு செய்கின்றனர். தி.மு.க., ஆட்சியில் பலமுறை அரசுக்கும், வருவாய் செயலருக்கும் மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வீரபாண்டி ஆறுமுகம், மேயர் ரேகாபிரியதர்ஷினி, கலெக்டர் சந்திரகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us