ADDED : ஜூலை 12, 2011 12:44 AM
நாமக்கல் : ''சிசு மரணத்தை கட்டுப்படுத்த, குழந்தை திருமணத்தை தவிர்க்க வேண்டும்,'' என, டி.ஆர்.ஓ., சீதாலட்சுமி கூறினார்.
தமிழ்நாடு அரசு குடும்ப நலத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தின சுகாதார விழா மற்றும் கருத்தரங்கம், நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் நடந்தது. மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ராமமூர்த்தி வரவேற்றார். சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பர்வின்கனி, மருத்துமனை கண்காணிப்பாளர் டாக்டர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சீதாலட்சுமி தலைமை வகித்து பேசியதாவது: இன்று நாம் கொண்டாடும் மக்கள் தொகை தின விழாவை மாற்றி, மக்கள் தொகை கட்டுப்படுத்தும் தினவிழாவாக அனுசரிக்க வேண்டும். மக்கள் தொகையை பெருக்க வேண்டும் என்ற நிலை மாறி, மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். நமது நாட்டில் இயற்கை வளங்கள் குறிப்பிட்ட அளவுதான் உள்ளது. மக்கள் தொகை அதிகரித்து இயற்கை வளம் குறைந்து வருகிறது. சில நாடுகளில் மக்கள் தொகையை பெருக்க அரசே முயற்சி எடுத்து வரும் நிலையும் உள்ளது. கருத்தரிப்பில் இருந்து சுடுகாடு செல்லும் வரை பல்வேறு அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஒரு கருப்பொருளை மையமாக வைத்து விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல், இந்த ஆண்டு 'சிறு குடும்பம்- முழுமையான வளர்ச்சி' என்ற கருப்பொருளை மையமாக வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நாட்டில், ஆண், பெண் விகிதம் சரிசமமாக இல்லை. வடமாநிலங்களில் ஒரு பெண்ணை, ஐந்து ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் நிலை உள்ளது. அது பரவலாக கூடாது என்பதற்காக ஆண், பெண் சதவிகிதம் சரிசமமாக இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், சிசு மரணம் அதிக அளவில் உள்ளது. குறிப்பிட்ட வயதை எட்டாத, மனதளவில் வளர்ச்சி அடையாத பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதே அதற்கு காரணம். குழந்தை திருமணத்தை தவிர்க்க வேண்டும். இங்கு பேசப்பட்ட கருத்துக்களை நான்கு சுவற்றுக்குள் நின்று விடாமல், மாணவியர் வெளியே சென்று உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவை முன்னிட்டு, கண்காட்சி, சுகாதார விழா, கருத்தரங்கம், பேச்சு, கட்டுரை, பாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் டாக்டர் மதிவாணன், கல்லூரி முதல்வர் லிங்கம்மாள், டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.


