Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இனிமையாகப் பேசுங்கள்

இனிமையாகப் பேசுங்கள்

இனிமையாகப் பேசுங்கள்

இனிமையாகப் பேசுங்கள்

UPDATED : ஆக 03, 2011 07:32 AMADDED : ஆக 03, 2011 12:36 AM


Google News
Latest Tamil News
ரமலான் நோன்பை நல்ல முறையில் கடைபிடித்து வரும் வேளையில், முகம் மலர பேசுவது குறித்து இன்று சிந்திப்போம்.

சிலரைப் பார்க்கச் சென்றால் பேச்சாலேயே விரட்டி விடுவார்கள். அந்தளவுக்கு வார்த்தைகளில் கடுமை இருக்கும். கனிவாகப் பேசுவதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்புகிறார்கள். நம்மைக் காண வருபவர் எத்தகைய ஏழையாக இருந்தாலும், இதை கடைபிடிக்க வேண்டும்.

ஒருசமயம், ஒருவர் நபிகளாரைக் காண காத்து நின்றார். இதுபற்றி, நாயகம்(ஸல்) அவர்களிடம் தகவல் சொல்லப்பட்ட போது, ''அவன் நல்லவனில்லை, இருந்தாலும் அவனை உள்ளே வரச்சொல்லுங்கள்,'' என்றார்கள். அந்த மனிதரிடமும் பரிவுடன் பேசினார்கள். அந்த மனிதர் சென்ற பிறகு, நாயகம்(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா நாயகி அவர்கள், ''அவனை விரும்பாத நிலையிலும், அவனிடம் எப்படி இவ்வளவு அன்பாக பேச முடிகிறது?'' என்று கேட்டார்கள்.



அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள்,''இறைவனின் பார்வையில் கெட்ட மனிதன் யார் தெரியுமா? தன்னோடு ஜனங்கள் உறவாட இடந்தராத அளவில் கொடுமொழி பேசுபவன் தான்,'' என்று பதிலளித்தார்கள். இன்னொரு சம்பவத்தையும் உதாரணம் காட்டலாம்.



ஒருசமயம் நாயகம்(ஸல்) அவர்கள், தங்கள் தோழர்களுடன் அமர்ந்திருந்த போது, அவர்களது செவிலித்தாய் ஹலீமாவின் கணவர் அவரைக் காண வந்தார். உடனே நாயகம்(ஸல்) அவர்கள், தான் அமர்ந்திருந்த விரிப்பின் ஒரு முனையை விரித்து விட்டு, அதில் அவரை அமரச்செய்தார்கள். பின்னர் ஹலீமாவின் தாயார் வந்தார். அவருக்கு மற்றொரு முனையை விரித்துக் கொடுத்து அமரச்செய்தார்கள். இதையடுத்து ஹலீமாவின் சகோதரர் வரவே, நாயகம் அவர்கள் எழுந்துகொண்டு, அவருக்கு விரிப்பைக் கொடுத்தார்கள். இதில் இருந்து அவர்களது கனிவான உபசரிப்பை உணரலாம்.

நம்மைத் தேடி வருபவர்கள், நமக்கு ஆகாதவர்களாக இருந்தாலும் அவர்களிடமும் கனிவு காட்டும் பண்பை இந்த ரமலான் காலத்தில் கற்றுக் கொள்வோம். காலம் முழுவதும் கடைபிடிப்போம்.



இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.29மணி







      Our Apps Available On




      Dinamalar

      Follow us