சபாநாயகரின் தேனீர் விருந்து : புறக்கணித்தார் அத்வானி
சபாநாயகரின் தேனீர் விருந்து : புறக்கணித்தார் அத்வானி
சபாநாயகரின் தேனீர் விருந்து : புறக்கணித்தார் அத்வானி
ADDED : செப் 08, 2011 11:39 PM

புதுடில்லி: சபாநாயகர் மீரா குமார் அளித்த தேனீர் விருந்தை, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜும் நேற்று புறக்கணித்தனர்.
ஓட்டுக்கு பணம் கொடுத்த, வழக்கு தொடர்பாக, பா.ஜ., முன்னாள் எம்.பி.,க்கள் இருவர் கைது செய்யப்பட்டது குறித்து, நேற்று லோக்சபாவில், அத்வானி பேசிய போது, காங்கிரஸ் எம்.பி.,க்கள் அடிக்கடி அமளியில் ஈடுபட்டனர். இதனால், அதிருப்தியடைந்த அத்வானி, இதுபற்றி பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பன்சாலிடம் புகார் தெரிவித்தார். அத்துடன் பார்லிமென்ட் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபாநாயகர் அளிக்கும் தேனீர் விருந்தில் கலந்து கொள்ளாமல், அத்வானியும், சுவராஜும் சென்றனர். உடன் அவர்களை நோக்கிச் சென்ற அமைச்சர் பன்சால், தேனீர் விருந்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அப்போதும் கோபம் தணியாத அத்வானி, காங்கிரஸ் எம்.பி.,க்களின் செயல்பாடு குறித்து, பன்சாலிடம் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அவரை சமாதானப்படுத்த, பன்சால் முயன்றும் முடியவில்லை. சுஷ்மாவுடன் தேனீர் விருந்தில் பங்கேற்காமல் அவர் சென்று விட்டார். அதேநேரத்தில், சபாநாயகரின் தேனீர் விருந்தில், லோக்சபா பா.ஜ., துணைத் தலைவர் கோபிநாத் முண்டே, பா.ஜ., தலைமை கொறடா ரமேஷ் பெய்ஸ் உட்பட, சிலர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


