ஐ.டி., பூங்காக்களில் கடை விரித்தும் கொள்வாரில்லை
ஐ.டி., பூங்காக்களில் கடை விரித்தும் கொள்வாரில்லை
ஐ.டி., பூங்காக்களில் கடை விரித்தும் கொள்வாரில்லை
UPDATED : ஆக 30, 2011 02:09 AM
ADDED : ஆக 30, 2011 12:28 AM
சென்னை : தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் எட்டு பூங்காக்களிலும், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், ஒதுக்கீடு செய்யப்படாமல் காலியாகவே உள்ளன.
சில இடங்களில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் வேண்டாமென, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மறுத்து, தாங்கள் கட்டிய பணத்தை திரும்ப கேட்டுள்ளன.தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் அபரிமிதமான வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, மாநிலம் முழுவதும் எட்டு இடங்களில் தகவல் தொழில்நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை மேம்படுத்தி, ஒதுக்கீடு செய்யும் பொறுப்பு, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்துக்கு (எல்காட்) வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில், உலகளவில் பெயர் பெற்ற மையமாகத் தமிழகம் திகழ்ந்தாலும், பொருளாதார மண்டலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களே முழுமையாக விற்றுத் தீர்ந்தபாடில்லை. சோழிங்கநல்லூர் பொருளாதார மண்டலத்தில், 377.08 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அடிப்படை கட்டமைப்புப் பணிகளுக்காக, 42 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அப்படியிருந்தும், இதில், 215 ஏக்கர் நிலம் தான் விப்ரோ, எச்.சி.எல்., மகிந்திரா, சத்யம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திறந்தவெளி ஒதுக்கீடு மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கான இடம் போக, 92.36 ஏக்கர் நிலம், கொள்வாரில்லாமல் காலியாக உள்ளது. சென்னையின் அருகில் உள்ள சோழிங்கநல்லூருக்கே இந்த நிலைமை எனும்போது, சேலம், திருநெல்வேலி போன்ற பகுதிகளைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. கோவையில் அனுமதிக்கப்பட்ட, 61.59 ஏக்கர் நிலத்தில், 19 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 26.19 ஏக்கர் (மூன்றில் ஒரு பங்கு) நிலம் இன்னும் அப்படியே உள்ளது. இதேபோல, மதுரை இலந்தைகுளத்தில், 28.91 ஏக்கர் நிலத்தில் பாதிக்குப் பாதியாக, 14 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது. ஏற்கனவே ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கீடு பெற்ற, எச்.சி.எல்., 'இப்பூங்காவில் தங்கள் நிறுவனத்தைத் துவக்க விருப்பமில்லை' எனக் கூறி, தாங்கள் செலுத்திய பணத்தை திரும்பக் கேட்டுள்ளது. மதுரை வடபழஞ்சியிலும் இதே கதை தான். 27 கோடி ரூபாய் செலவில் 245.17 ஏக்கர் நிலம் தயார் செய்யப்பட்டு, 181.15 ஏக்கர் நிலம், 'போணி'யாகாமல் உள்ளது. எச்.சி.எல்., சத்யம், சின்டெல், சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனங்களுக்கு, 140 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அத்தனையையும் அப்படியே எடுத்துக்கொண்டு, கொடுத்த காசை திருப்பிக் கொடுத்தால் போதும் என அந்நிறுவனங்கள் கதறுகின்றன. இப்படியாக, திருச்சியில், 80.73 ஏக்கர் நிலமும், திருநெல்வேலியில், 231 ஏக்கரும், சேலத்தில், 28.38 ஏக்கரும், ஓசூரில், 81.25 ஏக்கரும் ஒதுக்கீடு செய்யப்படாமலே உள்ளது. ஏனிந்த நிலைமை என்பது குறித்து, 'நாஸ்காம்' மண்டல மேலாளர் புரு÷ஷாத்தமன் கூறியதாவது: பயப்படும்படியான எந்த காரணமும் இல்லை. சென்னை போன்ற பெருநகரங்களிலேயே இன்னும் அதிகமான இடங்கள் இருக்கும்போது, அவற்றில் விரிவாக்கத்தை முடித்துவிட்டு, அதன் பிறகு பிற மாவட்டங்களுக்குச் செல்லலாம் என்ற, நிறுவனங்களின் எண்ணம் தான் முக்கியமான காரணம். சேலம், திருநெல்வேலி, ஓசூர் போன்ற இரண்டாம் கட்ட நகரங்களுக்கான விமானத் தொடர்புகள் இல்லை அல்லது குறைவாக இருக்கிறது. கோவை, திருவனந்தபுரம், பெங்களூரு வழியாகத் தான் இந்நகரங்களைச் சென்றடைய வேண்டியிருக்கிறது. அதையும் மீறி, நெல்லையில் சின்டெல், திருச்சியில், 13 நிறுவனங்கள் என, ஏராளமான நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள், இரண்டாம் கட்ட நகரங்களை நோக்கி படையெடுத்துள்ளன. நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதி, பிற மாவட்டங்களில் கிடைக்கிறதா என்ற கேள்விக்கே இடமில்லை. தமிழகத்தில் பெரும்பான்மையான இன்ஜினியரிங் கல்லூரிகள், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் தான் இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், சென்னைக்கு நிகரான திறமையாளர்கள், அதை விடக் குறைவான சம்பளத்துக்கு, பிற மாவட்டங்களில் தான் கிடைக்கின்றனர். தமிழக அரசு கொஞ்சம் முயற்சி எடுத்து நடவடிக்கை மேற்கொண்டால், எல்லா பொருளாதார மண்டலங்களும், சிறப்பு சேர்க்கும்.இவ்வாறு புரு÷ஷாத்தமன் கூறினார். இந்த நிலையில், வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் தொழில்நுட்பப் பூங்காக்களைத் திறக்க உள்ளதாக தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. 8 தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் சென்னை, சோழிங்கநல்லூர் கோயம்புத்தூர், விளாங்குறிச்சிமதுரை, இலந்தைகுளம் மதுரை, வடபழஞ்சிதிருச்சி, நவல்பட்டுநெல்லை, கங்கைகொண்டான் சேலம், ஜாகீர்அம்மாபாளையம்ஓசூர், விஸ்வநாதபுரம் ஒதுக்கீடு காலியிடம் செலவு 1699.09 740.06 205.61 ஏக்கர் ஏக்கர் கோடி


