சிக்கிம் பூகம்ப நிவாரண பணிகளுக்கு ரூ.1,000 கோடி : பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பு
சிக்கிம் பூகம்ப நிவாரண பணிகளுக்கு ரூ.1,000 கோடி : பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பு
சிக்கிம் பூகம்ப நிவாரண பணிகளுக்கு ரூ.1,000 கோடி : பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பு

கேங்டாக் : சிக்கிமில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பிரதமர் மன்மோகன் சிங், நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
சிக்கிம் மாநிலத்தில், கடந்த 18ம் தேதி, கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில், 90க்கும் மேற்பட்டோர் பலியாயினர். ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. முக்கிய சாலைகளில் நிலச் சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ராணுவம், பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்டோரின் கடும் முயற்சியால், தற்போது, சிக்கிம் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதற்கிடையே, வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங், நாடு திரும்பியதை அடுத்து, நேற்று, சிக்கிம் மாநிலத்துக்கு வந்தார். தலைநகர் கேங்டாக்கில், கவர்னர் பி.பி.சிங், முதல்வர் சாம்லிங் ஆகியோர், பிரதமரை வரவேற்றனர். இதன்பின், ராணுவ ஹெலிகாப்டரில் சென்ற பிரதமர், பூகம்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட லாசுங், லச்சென், சுங்தாங் ஆகிய பகுதிகளை பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து, பூகம்பத்தால் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நிவாரணப் பணிகளை மேற்கொள்வது குறித்து, சிக்கிம் மாநில அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், 'சிக்கிமில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு சார்பில், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது' என்றார்.