எல்.பி.ஜி., எரிபொருள் விற்பனை நிலையங்கள் தட்டுப்பாடுஎண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமா அரசு?
எல்.பி.ஜி., எரிபொருள் விற்பனை நிலையங்கள் தட்டுப்பாடுஎண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமா அரசு?
எல்.பி.ஜி., எரிபொருள் விற்பனை நிலையங்கள் தட்டுப்பாடுஎண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமா அரசு?
ADDED : ஆக 27, 2011 11:52 PM
சென்னை:திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (எல்.பி.ஜி.,) எரிபொருள் நிரப்பும் வசதி, பெட்ரோல் நிலையங்களில் பரவலாக்கப்படாததால், இதைக் கொண்டு ஆட்டோக்களை இயக்கும் அரசின் முயற்சியில், தொய்வு ஏற்பட்டுள்ளது. காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களை எல்.பி.ஜி., எரிபொருளில் இயக்குவது தொடர்பாக, 2007ம் ஆண்டு, தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன் பின், எல்.பி.ஜி., இன்ஜின் பொருத்தப்பட்ட ஆட்டோக்களுக்கு மட்டும் புதிய பதிவுச்சான்று மற்றும் உரிமம் புதுப்பித்தலை, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் வழங்கி வந்தன.சென்னை உள்ளிட்ட நகரங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களில் மட்டும் எல்.பி.ஜி., கிடைக்கிறது. இதனால், இந்த எரிபொருளை நிரப்ப, தினமும் ஆட்டோக்கள் குறிப்பிட்ட பெட்ரோல் நிலையங்கள் முன், மணிக்கணக்கில் வரிசைகட்டி நிற்க வேண்டியதானது.
பெட்ரோலை போல, எல்.பி.ஜி.,யையும், பெட்ரோல் நிலையங்களில் பரவலாகக் கிடைக்க செய்ய வேண்டும். அதன் பின், ஆட்டோக்களை எல்.பி.ஜி.,யில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதனால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டது.
கடந்த மாத நிலவரப்படி, சென்னை நகரில் ஓடும் 65 ஆயிரத்து 550 ஆட்டோக்களில், 34 ஆயிரத்து 767 ஆட்டோக்களும், பிற மாவட்டங்களில் ஓடும், 2 லட்சத்து 5,996 ஆட்டோக்களில், 40 ஆயிரத்து 248 ஆட்டோக்கள் மட்டும் எல்.பி.ஜி.,யில் இயங்குகின்றன.
ஆனால், சென்னை தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து மண்டலங்களில், மொத்தம் 23 பெட்ரோல் நிலையங்களில் மட்டுமே எல்.பி.ஜி., நிரப்பும் வசதி உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெட்ரோலை ஒப்பிடும் போது, குறைவான விலை போன்ற காரணங்களால், எல்.பி.ஜி.,யின் பயன்பாட்டை ஆட்டோ ஓட்டுனர்கள் விரும்புகின்றனர்.
சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பூதலிங்கம் கூறும் போது, ''ஒரு லிட்டர் எல்.பி.ஜி.,யின் விலை 40 ரூபாய் 50 பைசா. இதை, ஒரு லிட்டர் பெட்ரோல் விலையுடன் ஒப்பிடும்போது, 30 ரூபாய் மிச்சம். இதில், 'மைலேஜ்' கூட, பெட்ரோல் அளவிற்கு கிடைக்கிறது. எல்.பி.ஜி.,யில் ஆட்டோவை இயக்குவது லாபகரமாகத் தான் உள்ளது. இதை நிரப்ப, பெட்ரோல் நிலையங்கள் முன், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதால், சவாரியை இழக்க நேரிடுகிறது'' என்றார்.
பாக்ஸ்:
கையாளுவது கடினம்:பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் கண்ணன் கூறியதாவது: பெட்ரோலை விட, எல்.பி.ஜி.,யை கையாளுவது சவாலான விஷயம். இதை நிரப்ப போதிய இடவசதி, எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசிடமிருந்து சிறப்பு ஒப்புதல் உள்ளிட்ட பல நடைமுறைகள் உள்ளன. 10 ஆயிரம் லிட்டர் எல்.பி.ஜி., எரிபொருளை கையாளும் ஒரு பெட்ரோல் நிலையம், அதை முழுவதும் விற்பதற்குள், குறைந்தபட்சம் 500 லிட்டர் ஆவியாகிவிடும்.தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதால், பெரும்பாலான பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் எல்.பி.ஜி., எரிபொருளை விற்க விரும்புவதில்லை'' என்றார்.


